Published : 29 Aug 2019 10:40 AM
Last Updated : 29 Aug 2019 10:40 AM

தாங்கள் பணிபுரியும் கிராமங்களில் விஏஓக்கள் தங்கி பணியாற்றுவது சாத்தியமா?

விழுப்புரம் அருகேயுள்ள காவணிப்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடம் இது. தமிழகத்தின் ஒவ்வொரு கிராம நிர்வாக அலுவலகமும் ஏறக்குறைய இதே போன்ற பரிதாபமான நிலையில் தான் காட்சியளிக்கிறது.

எஸ்.நீலவண்ணன் 

விழுப்புரம்

உயர்நீதிமன்ற மதுரை கிளையின் ஆணைப்படி, கிராம நிர்வாக அலுவலர்கள் தாங்கள் பணிபுரியும் கிராமங்களில் தங்கி பணிபுரியாமல் இருப்பது மற்றும் அவர்களின் செயல்பாடுகள் சம்மந்தமாக பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் குறித்து விசாரணை செய்ய மாவட்ட அளவிலான குறைதீர் மையம் தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களுக்கு அமைக்கப்பட்டுள்ளது.

அரசின் ஆணை குறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத் தலைவர் வள்ளல் பாரி கூறியது:

கிராம நிர்வாக அலுவலர்கள் பணியில் சேர்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த வட்டத்தில் பணியாற்றும் நிலை உள்ளது. மேலும் பணியாற்றும் கிராமத்தில் தங்கி பணியாற்ற வீடு கிடைக்காத நிலை உள்ளது. மேலும், அரசு சார்பில் கட்டப்பட்ட அலுவலகங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அருகாமையில் உள்ள குறுவட்ட தலைமை இடத்தில் தங்கி பணியாற்றுகின்றனர். இவர்களின் பணிகள் வருவாய்துறையின் களப்பணியாக மட்டுமில்லாமல் பல்வேறு துறைகளின் பணியாகவும் கடந்த சில ஆண்டுகளில் மாற்றங்கள் பெற்றுள்ளன. குடும்ப சூழல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி, மருத்துவ வசதிகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு கிராமத்தில் தங்கி பணியாற்ற வேண்டி நிர்பந்திப்பதை தளர்வு செய்வதே சிறப்பாக செயல்பட ஊக்குவிப்பதாகும் என்றார்.

கணினி இல்லாமல் எப்படி பணி செய்வது?

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங் கத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன் இது குறித்து கூறியது:

வருவாய் ஆய்வாளர், வட்டாட்சியர், செவிலி யர்கள், வேளாண் குடியிருப்பு, காவல் துறை ஆகியோருக்கு குடியிருப்பு உள்ளது. இவர்கள் அனைவரும் அந்த குடியிருப்பில் வசிக்கிறார்களா? கிராம நிர்வாக அலுவலர்களை நேர்மையான நிர்வாகிகளாக மாற்ற விரும்பினால் முதலில் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை இந்த அரசு செய்து தர வேண்டும். எங்கள் அலுவலகத் தில் கழிப்பறை, மின் வசதி கூட இல்லாத நிலை உள்ளது, கணினி இல்லை. இணையதள வசதி இல்லை. ஆனால் எல்லாம் கணினி மயம். அரசு பணியை சொந்த செலவில் தான் பார்க்க வேண் டிய நிலை உள்ளது.

ஒவ்வொரு நலத்திட்டங்களை அறிமுகம் செய்யும் போதும் அது முழுமையாக மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது நாங்களே. மக்கள் தொகைக்கு ஏற்றார் போல் மாவட்டங்களை பிரிப்பது போல ஏன் கிராமங்களை பிரிப்பது இல்லை. கேட்டால் வருவாய் பற்றாக்குறை என அரசு கூறுகிறது. அப்படியானால் மாவட்டங்களை பிரிக்க வருவாய் பற்றாக்குறை இல்லையா?

2015ம் ஆண்டு முதல் கணினி வழியாக பல்வேறு வகையான அரசு சான்றுகள் வழங்கப்படுகின்றன. இதற்காக கம்ப்யூட்டர் சென்டர் மூலம், கிராம நிர்வாக அலுவலர்கள் ஒரு நாளைக்கு குறைந்த பட்ச செலவு செய்த தொகை ரூ 50/- வீதம் 5 ஆண்டுகளுக்கு (1,825 நாட்கள்) ரூபாய் 91,250/- செலவு செய்துள்ளனர். கணினி வசதி செய்து தராத நிலையில் இப்பணத்தை நஷ்ட ஈடாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அரசு வழங்க வேண்டும்.

ஒவ்வொரு பெற்றோரும் தங்களின் குழந்தை களின் கல்விக்காக நகரங்களை நோக்கி செல்கின் றனர். ஆனாலும் நாங்கள் அருகாமையில் உள்ள சிறு நகரத்தில் தங்கியே பணியாற்றுகிறோம். அதிக பட்சம் 30 நிமிடத்திற்குள் பணியாற்றும் கிராமத் திற்கு சென்று விட முடியும். திருமணமாக பெண்கள் பணியில் சேர்ந்துள்ளனர். அவர்கள் எப்படி தனித்து கிராமங்களில் தங்க முடியும்? இதுபோன்ற சின்ன சின்ன இடர்பாடுகள் உள்ளது என்றார்.

இத்தகைய நடைமுறை சிக்கல்கள் இருந்தாலும், இந்த நடைமுறைக்கு கிராம மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கவே செய்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு சிறு விவசாயிகள் முன்னேற்ற சங்க நிர்வாகி கடவம்பாக்கம் மணி கூறியது:

கிராம நிர்வாக அலுவலர் கிராமத்தில் தங்கி பணியாற்றினால், சட்டம் ஒழுங்கு பிரச்சினையை உடனே தடுக்க முடியும். சான்றிதழ் வேண்டி இ-சேவை மையத்தில் விண்ணப்பித்தாலும் கிராம நிர்வாக அலுவலரே சான்று அளிக்க முடியும். உள்ளுரில் இருந்தால் விண்ணப்பித்த தகவலைச் சொல்லி உடனே சான்று பெற்று கொள்ள முடியும்.

வெளியூரில் இருந்தால் கிராம நிர்வாக அலுவலரை சந்தித்து சொல்வது சிரமம். எனவே கிராம நிர்வாக அலுவலர் பணியாற்றும் கிராமத்தில் தங்கி பணியாற்றுவதை, கிராம மக்கள் அனைவரும் வரவேற்கிறார்கள்; வரவேற்பார்கள் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x