Published : 29 Aug 2019 10:24 AM
Last Updated : 29 Aug 2019 10:24 AM

ஸ்மார்ட் சிட்டி திட்டமும், நூற்றாண்டு மரங்களும்... மறுநடவு செய்ய வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்

பெ.ஸ்ரீனிவாசன்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன கட்டமைப்புகளை உருவாக்கும் பணிகள் திருப்பூரில் வேகமெடுத்துள்ளன. அதேசமயம், இதற்காக வெட்டப்பட உள்ள, நூற்றாண்டுகள் பழமையான மரங்களை மாநகராட்சி என்ன செய்யப் போகிறது என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேலும், இந்த மரங்களை வெட்டாமல், மாநகராட்சி நிர்வாகமே மறுநடவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்று வருகிறது.

மத்திய அரசு திருப்பூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை செயல்படுத்த ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் கே.பழனிசாமி, கடந்த பிப்ரவரி மாதம் 28-ம் தேதி அடிக்கல்நாட்டி தொடங்கிவைத்தார். இதில், குடிநீர் விநியோகம் மேம்பாடு, திறந்தவெளி காலியிட மேம்பாடு, ஒருங்கிணைந்த மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டு மையம், புதிய குடிநீர் திட்டப் பணிகள், பாதாள சாக்கடைப் பணிகள், மாநாட்டு அரங்கம் கட்டுதல், நவீன பேருந்துநிலையம், பல அடுக்கு வாகன நிறுத்துமிடம், எல்.இ.டி. தெரு விளக்குகள் நிறுவுதல், சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலை அமைத்தல், தினசரி மற்றும் வாரச்சந்தை மேம்படுத்தல், பூ மற்றும் மீன் சந்தைகள் மேம்படுத்தல், ஓடைகள் மேம்பாடு, சாலை மேம்பாடு, மேம்பாலம் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

கடந்த சில மாதங்களாக மெதுவாக நடைபெற்று வந்த ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன. குறிப்பாக, தற்போதைய டவுன்ஹால் பகுதியில் உள்ள கட்டிடங்களை இடித்துவிட்டு, நான்கு மாடியில் புதிய பொதுப் பயன்பாட்டு கட்டிடம், பழைய பேருந்து நிலையத்தை நவீனப்படுத்தும் பணிகள், அதையொட்டியுள்ள முத்துப்புதூர் பள்ளிக் கட்டிடத்தை அகற்றி விட்டு, அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் கட்டும் பணிகள் ஆகியவை முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்தக் கட்டமைப்புகள் அமைந்துள்ள பகுதிகளில், நூற்றாண்டு பழமைவாய்ந்த மரங்கள் பல உள்ளன. அவற்றை என்ன செய்யப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட 100 நகரங்களின் பட்டியலில் திருப்பூர் 32-வது இடத்தில் உள்ளதாக, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்துக்கு அளிக்கப்பட்ட அறிக்கை ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகு சூழலில், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், நூற்றாண்டு பழமையான மரங்களை வெட்டிவிடாமல், அவற்றை மறுநடவு செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக, திருப்பூரில் தொடர்ச்சியாக மரக்கன்றுகளை நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள, கிராமிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமாரிடம் பேசினோம்.

“வளர்ந்த மரங்களை வெட்டுவதை முடிந்த அளவுக்கு தவிர்க்க வேண்டும். மரங்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். நிலையான சூழல், நல்ல வாழ்க்கைத் தரம், போதுமான கட்டமைப்புகள், நல்ல பொருளாதார வளர்ச்சி என்பனவற்றை உள்ளடக்கியதே ஸ்மார்ட் சிட்டி திட்டம். மரங்களை வெட்டி விட்டு, எப்படி நல்ல வாழ்க்கைத் தரத்தை கொண்டுவர முடியும்? எனவே, இந்த மரங்களைக் காப்பாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தன்னார்வலர்களிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளாமல், மாநகராட்சி நிர்வாகமே நிதி ஒதுக்கீடு செய்து, மரங்களை அழித்து விடாமல் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவேளை மரங்களை வெட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், மரங்களை அங்கிருந்து உரிய முறையில் பாதுகாப்பாக அகற்றி, மறுநடவு செய்து, பராமரிக்க வேண்டும்” என்றார்.

வனத்துக்குள் திருப்பூர் திட்ட இயக்குநர் குமார் துரைசாமி கூறும்போது, “தற்போதைய சூழலில் சாலை விரிவாக்கம், கட்டுமானப் பணிகளுக்காக பழமையான மரங்கள் வெட்டப்படுவது தொடர்கதையாகிவிட்டது. இதனால், கடந்த 20 ஆண்டுகளில் பருவநிலையில் மிகப் பெரிய மாற்றங்கள் நேரிட்டுள்ளன. திடீரென அதிக மழை பெய்கிறது, திடீரென மழை இல்லாமல் வறட்சி ஏற்படுகிறது.
பொதுவாக நீர்நிலைகள் என்றால் குளம், குட்டை போன்றவைதான் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையான நீர்நிலைகள் மரங்கள்தான். உதாரணமாக, 10 கிலோ வேப்ப மர இலைகளைப் பறித்து, காயவைத்தால் சில நாட்களில் அது ஒரு கிலோவாக மாறி விடும். காணாமல்போன 9 கிலோவும் தண்ணீர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கட்டமைப்புகளுக்கு ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்யும்போதே, நூற்றாண்டு மரங்களை உரிய தொழில்நுட்பம் மூலமாக, மறுநடவு செய்ய வேண்டுமென ஒப்பந்ததாரர்களுக்கு அரசு நிபந்தனை விதிக்க வேண்டும்.
சீனாவில் மரங்களை வெட்டவே மாட்டார்கள். அத்தனை மரங்களும் மறுநடவு செய்யப்பட்டு வருகின்றன. இது அரசு உத்தரவாகவே உள்ளது. இந்தியாவிலும் இதுபோன்ற உத்தரவை அரசு பிறப்பிக்க வேண்டும். ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளான மரங்களை வெட்டாமல், பாதுகாக்க வேண்டும்” என்றார்.

தன்னார்வலர்கள் முன்வரலாம்...

திருப்பூர் மாநகராட்சி ஆணையர் சிவக்குமார் கூறும்போது, “ஏற்கெனவே மாநகராட்சிப் பகுதிகளில் மியாவாக்கி முறையில் மரக்கன்றுகளை நடவுசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 5 ஆயிரம் மரக்கன்றுகள் வரை நடவு செய்யப்பட்டுள்ளன. தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து, இப்பணிகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தொடர்ந்து அதிக அளவில் மரக்கன்றுகளை நடவு செய்து வருகிறோம்.

தற்போது ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளுக்காக, டவுன்ஹால் பகுதியில் உள்ள 6 பெரிய மரங்கள், முத்துப்புதூர் பள்ளி வளாகத்தில் உள்ள 4 பெரிய மரங்களை வெட்ட வேண்டிய அவசியம் உள்ளது.

இவற்றை தற்போதைய சூழலில் மறுநடவு செய்யும் திட்டம் எதுவும் மாநகராட்சி வசமில்லை. ஒரு மரத்துக்கு 10 மரக்கன்றுகளை மாற்று இடங்களில் நடவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. வெட்டப்பட உள்ள பெரிய மரங்களை மறுநடவு செய்ய விரும்பும் தன்னார்வலர்கள், அவற்றை எடுத்துச் சென்று, வேறு இடங்களில் மறுநடவு செய்ய அனுமதி வழங்கப்படும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x