ரசிகர்களை மயக்கிய லிடியன் நாதஸ்வரம்!

ரசிகர்களை மயக்கிய லிடியன் நாதஸ்வரம்!
Updated on
2 min read

எஸ்.கோவிந்தராஜ்

அமெரிக்காவில் நடந்த ஒரு ரியாலிட்டி ஷோவில், பிரசித்தி பெற்ற இசைக் கலைஞர்களுக்கு மத்தியில், ஒரே நேரத்தில் இரு பியானோக்களில் இருவிதமான பாடல்களை வாசித்து ரூ.7 கோடி பரிசு வென்றார் தமிழகத்தைச் சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம்.

சென்னையை பூர்வீகமாக கொண்ட லிடியன் நாதஸ்வரத்தை, ஹாலிவுட் பாடகர் ஜேம்ஸ் கார்டன், தமிழக இசையமைப்பாளர் அனிருத் என பலரும் பாராட்டினர். இவற்றையெல்லாம்விட, ஏ.ஆர்.ரகுமானின் மனம் திறந்த பாராட்டு, லிடியனுக்கு கிடைத்த பாராட்டுகளின் உச்சம் எனலாம்.அண்மையில் ஈரோடு இந்தியன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த லிடியன் நாதஸ்வரத்திடம் பேச்சுக்கொடுத்தோம்.

“எனது அக்காதான் இசையில் எனக்கு குரு. அவருக்கு நிறைய மியூசிக் தியரி தெரியும். அவரையே என் முன்மாதிரியாகப் பார்க்கிறேன். ஒருநாள் நானும், அக்காவும் விளையாடிக் கொண்டிருந்தபோது, என் முகத்தை டவலால் கட்டி, வாசிக்கச் சொன்னார். நானும் வாசித்தேன். அதிலிருந்து கண்ணைக்கட்டிக் கொண்டு வாசிக்கத் தொடங்கி விட்டேன்.

ஏ.ஆர்.ரஹ்மான் அங்கிள் எனக்கு நல்ல நண்பர். நான் ‘வேர்ல்ட் பெஸ்ட்’ பட்டம் ஜெயித்தபோது, அவரது இசைக் கல்லூரியில் எனக்கு பாராட்டு விழா நடத்தினார். அவருடன் சேர்ந்து, சென்னையில் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே சிறந்த கம்போசர்கள். இளையராஜா சாரின் `ஹவ் டூ நேம் இட் ஆல்பம்’ மிகவும் பிடிக்கும்.

எனக்கு டிரம்ஸ், பியானோ இரண்டுமே மிகவும் பிடிக்கும். நான்கு ஆண்டுகளுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் டிரம்ஸ் வாசித்தபோது, ஏ.ஆர்.ரகுமான் வெகுவாகப் பாராட்டினார். சினிமா பாடல்களைப் பொறுத்தவரை, இளையராஜா இசையமைத்த எல்லா பாடல்களும் பிடிக்கும்.

எந்த துறையாக இருந்தாலும், தொடர்ந்து பயிற்சி செய்வதன் மூலம், சாதிக்க முடியும். அதுவே, வெற்றிக்கு அழைத்துச் செல்லும் படிக்கட்டுகளாக இருக்கும். எதிர்காலத்தில், ஹாலிவுட் தயாரிப்பு அனிமேஷன் படத்துக்கு இசை அமைக்க வேண்டும் என்பதும், 2023-ல் நிலவில் நடைபெற உள்ள இசை நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதுமே எனது கனவுகள்” என்றார் நம்பிக்கையுடன் லிடியன் நாதஸ்வரம்.

“இதெல்லாம் சரி, அது என்ன லிடியன் நாதஸ்வரம்? பெயரே வித்தியாசமாக இருக்கிறதே?” என்று அவரது தந்தை வர்ஷன் சதீஷிடம் கேட்டோம். “லிடியன் என்பது கல்யாணி ராகத்தின் மேற்கத்திய பெயர். கல்யாணி ராக நோட்ஸ்தான் லிடியன் நோட்ஸ். உலகில் கடினமான இசைக்கருவி நாதஸ்வரம். இசைக்கு ஸ்வரமும், நாதமும் முக்கியம். இரண்டும் சேர்ந்து வாத்தியம் அது. இந்த இரண்டையும் சேர்த்து என் மகனுக்கு `லிடியன் நாதஸ்வரம்’ என்று பெயர் வைக்க வேண்டுமென, திருமணத்துக்கு முன்பே முடிவு செய்து விட்டேன்” என்றார் வர்ஷன் சதீஷ். லிடியனின் அக்கா அமிர்தவர்ஷினியும் சிறு வயது முதலே இசைப் பயிற்சி பெற்றுள்ளார். கங்கை அமரன் குழுவில் அவரது மூன்றாவது வயதிலேயே பாடியுள்ளார். அமிர்தவர்ஷினி பியானோ வாசிப்பதைப் பார்த்துதான், லிடியனுக்கும் பியானோ மீது காதல் வந்துள்ளது. புல்லாங்குழல், தியரி, சிம்பொனி இசைக்கோர்வை, தனிப்பாடல் என பன்முகத் திறமையோடு விளங்கும் அமிர்தவர்ஷினி, இந்திய சிம்பொனி இசைக் குழுவில் வாசிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in