தமிழர்களை விட்டுச் செல்லும் எழுத்துப் பழக்கம்: தமிழாற்றுப்படை நூல் அறிமுக விழாவில் கவிஞர் வைரமுத்து கருத்து

தமிழாற்றுப்படை நூல் அறிமுக விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து.
தமிழாற்றுப்படை நூல் அறிமுக விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து.
Updated on
1 min read

திருப்பூர்

எழுத்துப் பழக்கம் தமிழர்களை விட்டு சென்று கொண்டிருக்கிறது, எனவே தமிழர்களே தயவு செய்து எழுதுங்கள் என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

வெற்றித் தமிழர் பேரவை சார்பில் கவிஞர் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் அறிமுக விழா திருப்பூரில் நேற்று நடைபெற்றது.

நிகழ்வுக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனர் கே.ஆர்.நாகராஜன் தலைமை வகித்தார். மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் நூல் அறிமுக உரையாற்றினார். வெற்றித் தமிழர் பேரவை திருப்பூர் செயலாளர் எம்.ஜீவானந்தம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தமிழச்சி தங்கபாண்டியன் பேசும் போது, ‘கவிஞர் வைரமுத்து எழுதியுள்ள இந்த நூல் ஒரு ஆராய்ச்சி நூல். இந்த நூலை அனைத்து வரலாற்று காரணங்களையும் உணர்ந்து எழுதியுள்ளார் கவிஞர்.

தமிழாற்றுப்படை புத்தகம் அனைவரிடத்திலும் இருக்க வேண்டிய புத்தகம். தமிழர்கள் அனைவரும் அவரவர் வங்கி பாதுகாப்பு பெட்டகங்களில் வைத்து பாதுகாக்க வேண்டிய புத்தகமாக இது இருக்கும். தமிழகமெங்கும் இந்த புத்தகத்தை கொண்டு சேர்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த புத்தகத்தை அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்க வேண்டும். தமிழர்கள் ஒருபோதும் தங்களது உரிமை, மானத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம் என உலகிற்கு சொல்லும் வகையில் எழுதப்பட்ட புத்தகம் இது, என்றார்.

தொடர்ந்து கவிஞர் வைரமுத்து தனது ஏற்புரையில் பேசும் போது, தமிழாற்றுப்படை நூலை ஏன் எழுதினீர்கள் என என்னிடம் கேட்போருக்கு, ஒரு சிறிய நிலம், தங்கம் போன்ற சொத்துகளையே யாரும் விட முடியாத சூழல் உள்ள இந்த நிலையில், 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழை நாம் எப்படி விட முடியும் என்பதே எனது பதில்.

தற்போது நாடாளுமன்றத்தில் வடஇந்திய பண்பாடு சார்ந்த பேச்சே மேலோங்கி இருக்கிறது. வட இந்திய பண்பாடு என்பது தான் பண்பாடு என்றால் பிழை. தமிழ் பண்பாடு இல்லை என்றால் இந்தியா இல்லை. தமிழ் பண்பாடு நாடாளுமன்றத்தில் பேசப்பட வேண்டும்.

தமிழர்கள் ஒன்றை மறக்க கூடாது. இவ்வுலகில் எழுதுபவன் மட்டுமே அறிவாளி யாகிறான், படிப்பவன் அல்ல. தற்போது எழுத்துப் பழக்கம் தமிழர்களை விட்டு சென்று கொண்டிருக்கிறது. தமிழர்களே தயவு செய்து எழுதுங்கள், தொடர்ந்து தமிழை பேசுங்கள். பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் வையுங்கள்.

தமிழாற்றுப்படைக்காக 4 ஆண்டுகள் சினிமா பணிகளை ஒத்தி வைத்திருந்தேன். தற்போது சினிமா பணியில் ஈடுபடத் தொடங்கி விட்டேன். இயக்குநர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருடன் பொன்னியின் செல்வன் படத்தில் இணைந்து பணி செய்யவுள்ளேன், என்றார்.

தமிழ் ஆர்வலர்கள், தொழில் துறையினர், பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in