

சென்னை
வக்பு வாரிய கூட்டங்கள் நடக்காததால் முறைகேடுகள் நடப்பதாக வக்பு வாரிய உறுப்பினர் சையது அலி அக்பர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வக்பு வாரிய உறுப்பினர் சையது அலி அக்பர் கூறியதாவது: வக்பு வாரியத்துக்கு 12 உறுப்பினர்கள் தேர்தல் மற்றும் அரசு நியமனம் மூலம் நியமிக்கப்படுவர்.
இந்த 12 உறுப்பினர்களில் ஒருவர் வாரியத் தலைவ ராக தேர்வு செய்யப்படுவார். அந்த தலைவர் வராத நேரங்களில் உறுப்பினர்கள், தங்களில் ஒருவரை தலைவராகத் தேர்வு செய்து வாரியக் கூட்டங்களை நடத்துவார்கள். எம்பியாக இருந்த அன்வர்ராஜாவின் பதவிக்காலம் முடிந்ததால், வாரியத் தலைவர் பதவியும் முடிவடைந்துவிட்டது.
இந்நிலையில், வாரிய முதன்மை செயல் அலுவலர் நூ.ஷே.முகமது அஸ்லம், உறுப்பினர்களின் ஆலோசனை பெறாமல் வாரியக் கூட்டங்களை ரத்து செய்துவிட்டார். வக்பு வாரிய முதன்மை செயல் அலுவலர் முகமது அஸ்லம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலர் கார்த்திக் ஆகியோருக்கு கூட்டத்தை நடத்தும்படி கடிதம் அனுப்பியும், எந்த பதிலும் இல்லை. முகமது அஸ்லம் வாரியத்தின் முழு அதிகாரத்தையும் எடுத்துக் கொண்டு, தகுதியில்லாத நபர் களை வக்புகளின் நிர்வாக கமிட்டி யாக நியமித்து வருகிறார். வாரியம் செயல்படாததால், வாரிய அலுவ லர்களும் முறைகேட்டில் ஈடுபடு வதாக தெரியவருகிறது என்றார்.
இதுகுறித்து அரசு தரப்பில் கேட்டபோது, ‘‘வக்பு வாரியத்துக்கு தற்போது 10 உறுப்பினர்கள் இருக்கின்றனர். எம்பிக்கள் முகமது ஜான் (அதிமுக), நவாஸ்கனி (ஐயுஎம்எல்) ஆகியோர் வாரிய உறுப்பினர்களாக பொறுப்பேற்க வேண்டும். இதற்கு அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாரியத்தில் எம்பிக்கள் பதவி ஏற்ற பின்பு, தலைவர் தேர்வு செய்யப்படுவார். பின்னரே, கூட்டம் நடக்கும்’’ என்றனர்.