

சென்னை
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாடு சுற்றுப்பயணம் வெற்றி பெற வேண்டும் என, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறை தொடர்பான பல்வேறு முன்னேற்றங்கள், தொழில்நுட்பங்களை வெளிநாடுகளில் இருந்து அறிந்துகொண்டு, தமிழகத்தில் அவற்றை செயல்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் முதலீடுகளை பெறுவதற்காகவும், முதல்வர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு 14 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்கான ஒப்புதலை மத்திய அரசிடம் இருந்து பெற்ற அவர், இன்று (ஆக.28) லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக முதல்வரின் வெளிநாட்டுப் பயணத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக மாநில துணைத் தலைவர் எல்.கே.சுதீஷ், ஆகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உள்ளிட்டோர், முதல்வர் பழனிசாமியை அலுவலகத்தில் சந்தித்து, அவரது வெளிநாட்டுப் பயணம் சிறக்க வாழ்த்துகளை தெரிவித்தனர்.
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் இன்று வெளியிட்ட அறிக்கையில்,
"தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வதால், தொலைபேசியில் தொடர்புகொண்டு வெளிநாடு பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள் கூறினேன். பின்னர் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்தார்.
சுகாதாரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான முன்னேற்றங்களை அறிந்துகொள்ளவும், தமிழகத்தில் அந்நிய முதலீட்டை பெருக்கும் நோக்கிலும் தமிழகத்தில் பல்வேறு முதலீடுகளை பெற்றுவர இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துகள்", என தெரிவிக்கப்பட்டுள்ளது.