Published : 28 Aug 2019 03:33 PM
Last Updated : 28 Aug 2019 03:33 PM

முதல்வர் யாரிடமும் பொறுப்பை கொடுக்காததற்கு பயமே காரணம்: டிடிவி தினகரன்

திண்டுக்கல்

வெளிநாட்டு சுற்றுப் பயணம் சென்றுள்ள முதல்வர் பழனிசாமி, யாரிடமும் பொறுப்பை கொடுக்காததற்கு பயமே காரணம் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார்.

சுகாதாரத் துறை தொடர்பான பல்வேறு முன்னேற்றங்கள், தொழில்நுட்பங்களை வெளிநாடுகளில் இருந்து அறிந்துகொண்டு, தமிழகத்தில் அவற்றை செயல்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் முதலீடுகளை பெறுவதற்காக வும், முதல்வர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதற்கான ஒப்புதலை மத்திய அரசிடம் இருந்து பெற்ற அவர், இன்று லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

அதேபோல தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், எரிசக்தித்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட சில அமைச்சர்கள் அடுத்தடுத்த நாட்களில் லண்டன் செல்ல உள்ளனர். இதற்கிடையே முதல்வரின் வெளிநாட்டுப்பயணம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் கூறும்போது, ''முதல்வர் வெளிநாடு சென்றால், வேறு யாரிடமாவது பொறுப்புகளைக் கொடுத்து விட்டுச் செல்வார். ஆனால் இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. அதனால் நானே முதல்வர் பொறுப்பைப் பார்த்துக்கொள்கிறேன் என்கிறார். அப்படியெனில் அவருக்கு நம்பிக்கை இல்லாததுதான் இதற்குக் காரணம்.

நிச்சயமாக பயம் இல்லாமல் வேறென்ன? இந்த ஆட்சியையே கவிழ்ப்பதற்காக எதிர்த்து வாக்களித்தவர்தானே பன்னீர்செல்வம்? அப்போது காப்பாற்றிய எம்.எல்.ஏ.க்களை இப்போது பதவி இல்லாமல் செய்திருக்கிறார்கள். இதைக் கேட்டால், நாங்கள் துரோகம் செய்துவிட்டோம் என்பார்கள். யார் துரோகம் செய்தது என்பது கட்சித் தொண்டர்களுக்குத் தெரியும்'' இவ்வாறு தினகரன் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x