Published : 28 Aug 2019 02:45 PM
Last Updated : 28 Aug 2019 02:45 PM

சிசிடிவி கேமராவால் குற்றங்கள் 50% குறைந்துள்ளன: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பெருமிதம்

சென்னை

சிசிடிவி கேமராவால் குற்றங்கள் 50% குறைந்துள்ளது என, காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், இன்று நீலாங்கரை மற்றும் கருமாத்தூர் காவல் நிலையங்களில் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 209 சிசிடிவி கேமராக்கள் மற்றும் வாகனங்களின் பதிவு எண்களை துல்லியமாக பதிவு செய்து பட்டியலிடும் 8 ANPR சிசிடிவி கேமராக்கள் இயக்கத்தினை துவக்கி வைத்தார்

சென்னை அக்கரைப் பகுதியில் நிறுவப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

"சிசிடிவி மூலம் குற்றங்கள் தடுக்கப்பட்டுள்ளன. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு சிசிடிவி கேமராக்களால் 50% குற்றங்கள் குறைந்துள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்களான செயின் பறிப்பு சம்பவங்கள், செல்போன் பறிப்பு சம்பவங்கள் கண்டுபிடிப்பதில் சிக்கலாக இருந்தது. தற்போது அது 50% குறைந்துள்ளன.

காவல் துறை செயல்பாட்டில் வேகத்தை அதிகரிக்க இந்த சிசிடிவி கேமராக்கள் உதவியுள்ளன. சென்னை முழுதும் அதிகப்படியான கேமராக்களை நிறுவியதற்காக சென்னை காவல்துறைக்கு ஒரு விருதும் சுதந்திர தின விழாவில் கிடைத்துள்ளது.

நாங்கள் கேட்டவுடன் ஏராளமான சிசிடிவி கேமராக்களை பொருத்துவதற்கு உதவி செய்த பொதுமக்களுக்கு முதல் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதை ஊக்கப்படுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய காவல் உயர் அதிகாரிகள் முதல் கடை கோடி காவலர்கள்வரை அக்கறையுடன் செயல்பட்டவர்களுக்கு இரண்டாவது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன், மூன்றாவதாக இந்தப்பணியில் எங்களுக்கு ஆதரவாக இருந்த ஊடகத்துறையினருக்கு மூன்றாவது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப்பகுதி மிக முக்கியமான பகுதியாகும், பரபரப்பாக இயங்கும் பகுதியாகும். இப்பகுதியில் பாதுகாப்பை உறுதிப்படுத்த சிசிடிவி கேமரா முக்கியமானது ஆகும். இப்பகுதியில் நடந்த 2 முக்கியமான குற்றங்கள் உங்கள் அனைவருக்கும் ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன். ஐடி கம்பெனியில் பணியாற்றிய பெண் ஒருவர் கொல்லப்பட்டார். அடுத்து லாவண்யா என்கிற மென்பொறியாளர் வழிப்பறியில் கடுமையாக தாக்கப்பட்டார்.

இதில் முதல் குற்றத்திலும், இரண்டாவதாக லாவண்யா மீது நடந்த தாக்குதலில் சிறிய வீட்டில் அமைக்கப்பட்டிருந்த ஒரு சிறிய சிசிடிவி கேமரா துப்புதுலக்க முக்கிய காரணமாக அமைந்தது.உடனடியாக கண்டுபிடித்து, கைது செய்ய முடிகிறது.

சென்னை நீலாங்கரை அவ்வாறான குற்றங்களிலும், குற்றவாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க முடிந்தது. குற்றவாளிகளை தாமதமாக கைது செய்யும்போது, திருடிய பொருட்கள் மீண்டும் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். ஆனால், இப்போது திருடப்பட்ட பொருட்களை ஏறக்குறைய முழுமையாக பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அதே நேரத்தில் காவல்துறை பணி சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தாலே துப்புத்துலங்கும் வாய்ப்பாக சிசிடிவி செயல்படுகிறது. சமீபத்தில் சென்னையில் மனைவியே, தன் நண்பன் மூலமாக கணவனை கொலை செய்த சம்பவத்தில் , சிசிடிவி மூலமாகத்தான் குற்றவாளியை கண்டுபிடித்தோம். சிசிடிவி இல்லையென்றால் அதனை கண்டு பிடித்திருக்க முடியாது.

விபத்து குற்றங்களை ஆராய்ந்ததில், அவை கொலை என்பதை சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்டறிந்திருக்கிறோம். குற்றங்களை கண்டுபிடிப்பது மட்டுமல்லாமல், குற்றம் செய்யாதவர்களை நிரபராதி என நிரூபிப்பதற்கும் சிசிடிவி கேமராக்கள் உறுதுணையாக இருக்கின்றன.

உண்மையை சொல்வதற்கும், தவறை கண்டுபிடிக்கவும் சிசிடிவி பெரிய உதவியாக இருக்கிறது. சென்னை பெருநகரைப் பொறுத்தவரை தொழில்நுட்பத்தை பலவிதங்களில் நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். சிசிடிவி முக்கியமான ஒரு சாதனம்.

அபராதம் போன்ற விஷயங்களில் பணமில்லாமல் ஆன்லைன், கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தும்படி எளிமைப்படுத்தியுள்ளோம். செல்போன் திருட்டுகளை கண்டுபிடிக்க DIGICOP எனும் ஆப்-ஐ அறிமுகப்படுத்தியிருக்கிறோம். அந்த ஆப்பில், திருட்டு போன அனைத்து செல்போன்களின் விவரங்களும் இருக்கும். செல்போன் காணாமல் போனவர்களும் அதுகுறித்த தகவல்களை அந்த ஆப்பில் பதிவேற்றலாம்.

சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்கள் நடந்தால், அதனை புகைப்படமாக பொதுமக்களே பதிவேற்றுவதற்கும் காலன் எஸ்.ஓ.எஸ் ஆப் உள்ளது"

இவ்வாறு ஏ.கே.விஸ்வநாதன் பேசினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x