Published : 28 Aug 2019 01:04 PM
Last Updated : 28 Aug 2019 01:04 PM

மோடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதால்தான் சிதம்பரம் கைது: திருமாவளவன் விமர்சனம்

மதுரை

மோடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதால்தான் சிதம்பரம் கைது செய்யப்பட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''காஷ்மீர் விவகாரத்தில் இந்திய அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாகச் செயல்பட்டு விட்டது. காஷ்மீரில் சிறப்புச் சட்டத்தை ரத்து செய்தது ஜனநாயகப் படுகொலை. மத்திய அரசு பெரும் தொழிலதிபர்களுக்கு சலுகை செய்வதால்தான் தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மோடி அரசின் நடவடிக்கைகளை, தொடர்ந்து,அறிவார்ந்த தளத்தில் விமர்சித்ததாலும் மோடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதாலும்தான் முன்னாள் நிதியமைச்சரும் உள்துறை அமைச்சருமான சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். குறிப்பாக ஜிஎஸ்டி குறைகளைச் சுட்டிக் காட்டியதால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.

அனைத்து வரம்புகளையும் மீறி, வேறெங்கும் இப்படி நடந்ததில்லை என்று சொல்லக்கூடிய வகையில், மோடி அரசு அவரைக் கைது செய்துள்ளது. அந்த அணுகுமுறை திட்டமிட்ட ஒரு அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைதான் என்பதை தெளிவுபடுத்துகிறது.

தமிழக நலனுக்காக முதல்வர் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வது உண்மை என்றால் அது வரவேற்கக் கூடியதுதான். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் முதல்வர் இல்லையே? எதிர்க்கட்சித் தலைவரால் எப்படி அரசு முறைப் பயணம் மேற்கொள்ள முடியும்?

நாளை ஒருவேளை எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சித் தலைவர் ஆனால், அவரும் தனது சொந்தப் பயணமாகத்தான் வெளிநாடு செல்ல முடியும். அரசியல் என்ற அடிப்படையிலேயே முதல்வர், திமுக தலைவரை விமர்சித்துள்ளார்'' என்றார் திருமாவளவன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x