Published : 28 Aug 2019 11:51 AM
Last Updated : 28 Aug 2019 11:51 AM

ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்கிறார்;அதை யாரும் கேள்வி எழுப்புவதில்லையே? - முதல்வர் பழனிசாமி

சென்னை

தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றர்.

சுகாதாரத் துறை தொடர்பான பல்வேறு முன்னேற்றங்கள், தொழில்நுட்பங்களை வெளிநாடுகளில் இருந்து அறிந்துகொண்டு, தமிழகத்தில் அவற்றை செயல்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் முதலீடுகளை பெறுவதற்காக வும், முதல்வர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதற்கான ஒப்புதலை மத்திய அரசிடம் இருந்து பெற்ற அவர், இன்று லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ’’என்னை விமர்சிக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், அடிக்கடி வெளிநாடு செல்கிறார். அதை யாரும் கேள்வி எழுப்புவதில்லை. சொந்தக் காரணங்களுக்காக வெளிநாடு செல்வதாகச் சொல்கிறார், அது என்ன சொந்தக் காரணம்?

ஸ்டாலின் அடிக்கடி வெளிநாடு செல்வதன் மர்மம் என்ன? அவர் இதுவரை ஊடகங்களிடம் இதை விளக்கவில்லை. முதலீடுகளை ஈர்க்க நான் மேற்கொள்ளும் பயணத்தை, எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்துகின்றன. நான் சொந்தக் காரணமாக வெளிநாடு சொல்வதாகவும் கூறுகின்றன. இது தவறான கருத்து.

தொழிலதிபர்களிடம் இருந்து முதலீடுகளை ஈர்ப்பதற்காகவே வெளிநாடு செல்கிறேன். நான் பெரிய தொழிலதிபர் கிடையாது. ஒரு சாதாரண விவசாயி.

தமிழகத்துக்கு புதிய தொழிற்சாலைகள் வரவேண்டும். அதன் மூலம் வேலைவாய்ப்பு உருவாக வேண்டும். அதனால் பொருளாதாரம் உயர வேண்டும், அதுதான் எங்களின் லட்சியம். அதற்காகத்தான் வெளிநாடு சுற்றுப்பயணத்தை அமைத்துள்ளேன்’’ என்றார் எடப்பாடி பழனிசாமி.

வெளிநாடு செல்ல விமான நிலையம் வந்த முதல்வரின் காலில் விழுந்து வணங்கி, அதிமுகவினர் வழியனுப்பி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x