

காஞ்சிபுரம்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதற்கு தான் காத்திருப்பதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு (செவ்வாய்க்கிழமை) காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் சீமான் பேசியதாவது:
"ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. விஜய் திரைப்படத்தில் சொல்வது போல் 'ஐ ஆம் வெயிட்டிங்'. சண்டை வலுவாக நடக்கும். யாருடன் சண்டை என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
எத்தனை தேர்தல்கள் வந்தாலும் தனித்துத்தான் போட்டியிடுவோம். கமல்ஹாசனுடன் கூட்டணி வைக்கலாம் என்கின்றனர். அவருடன் சேர்ந்து நானும் பிக் பாஸில் ஒருவராக உள்ளே சென்று உட்கார்ந்து கொள்வதற்கா?
தமிழகத்தில் இப்போது 'ஷோ மேட்ச்' நடந்துகொண்டிருக்கிறது. ஒருவேளை ரஜினி அரசியலுக்கு வந்தால் ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பிக்கும்.
ரஜினிகாந்த்: கோப்புப்படம்
தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வந்துள்ள செய்தி 10 நாட்களுக்கு தாக்குப்பிடிக்கும். அத்திவரதர் செய்தி 48 நாட்களுக்கு ஓடியது. எந்த பிரச்சினைகளும் கவனத்திற்கு வரவில்லை. எங்கு திரும்பினாலும் அத்திவரதர் தான். கடைசியாக, ரஜினிகாந்தும் நயன்தாராவும் 'குட் பை' சொல்லி அனுப்பி வைத்தனர். அத்திவரதர் எவ்வளவும் பெருமையுடன் இருந்தாரோ, அந்தளவுக்கு அவரை சிறுமைப்படுத்தி அனுப்பினர்.
மாற்று பொருளாதாரத்துக்கு வழி தெரியவில்லை. நானே 8 கோயில்கள் கட்டலாம் என நினைக்கிறேன். 'ஜெய் ஸ்ரீராம்' போன்று 'வீரராவணன் வாழ்க' என நானும் கோஷமிடலாம் என இருக்கிறேன். கோயில் உண்டியலில் மக்கள் குறைகளை எழுதி போடச் சொல்லி, அவர்களின் குறைகளை தீர்த்து வைப்பேன்.
சமஸ்கிருதம், இந்தி படிக்க வேண்டும் என சொல்வது பிரச்சினையில்லை. தமிழ் படிக்க வேண்டும் என்று சொன்னால் பாசிசம் என்கின்றனர். தமிழ் வெறியர்கள், சிறு குழு என்கின்றனர்"
இவ்வாறு சீமான் பேசினார்.