

திருவள்ளூர்
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வெளிநாட்டுப் பயணம் 12 துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சுகாதாரத் துறை தொடர்பான பல்வேறு முன்னேற்றங்கள், தொழில்நுட்பங்களை வெளிநாடுகளில் இருந்து அறிந்துகொண்டு, தமிழகத்தில் அவற்றை செயல்படுத்தவும், வெளிநாடு வாழ் தமிழர்கள் மற்றும் முதலீட்டாளர்களிடம் முதலீடுகளை பெறுவதற்காக வும், முதல்வர் பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இதற்கான ஒப்புதலை மத்திய அரசிடம் இருந்து பெற்ற அவர், இன்று லண்டன் புறப்பட்டுச் செல்கிறார்.
அதேபோல தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத், எரிசக்தித்துறை அமைச்சர் தங்கமணி உள்ளிட்ட சில அமைச்சர்கள் அடுத்தடுத்த நாட்களில் லண்டன் செல்ல உள்ளனர். இதற்கிடையே இதுகுறித்து அமைச்சர் கே.பாண்டியராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கண்டிப்பாக அரசு இயந்திரம் செயல்படுவதில் எந்தத் தடங்கலும் இருக்காது. எப்போதும் போல தொடர்ந்து நிர்வாகம் நடைபெறும்.
ஏனெனில் முதல்வரின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்திருப்பீர்கள். ஒரு நிமிடம் கூட இடைவெளி இல்லாமல், நிகழ்ச்சி நிரல் அமைக்கப்பட்டிருக்கிறது. பால் வளத் துறையில் இருந்து உள்ளாட்சித் துறை வரை, எரிசக்தித் துறையில் இருந்து மின் வாகனங்கள் வரை சுமார் 12 துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் பயணமாக இது இருக்கும்'' என்றார் அமைச்சர் கே.பாண்டியராஜன்.