

புதுச்சேரி
புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்தபோது சபாநாயகர் அவையை நடத்த எதிர்ப்பு தெரிவித்து அவர் இருக்கையை எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக முற்றுகையிட்டனர். அதைத்தொடர்ந்து தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு கோஷமிட்டதால் அவையிலிருந்து ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் வெளியேற்றப்பட்டனர்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய கடந்த ஜூலையில் திட்டக்குழுக் கூட்டம் கூடி ரூ. 8,425 கோடியை பட்ஜெட் தொகையாக நிர்ணயித்தது. இக்கோப்புகள் அனுமதிக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 33 நாட்களுக்கு பிறகு அனுமதி கிடைத்தது. அதையடுத்து கூட்டத்தொடர் ஆளுநர் கிரண்பேடி உரையுடன் திங்களன்று (ஆக.26) தொடங்கியது.
இதைத்தொடர்ந்து முதல்வரும், நிதி அமைச்சருமான நாராயணசாமி இன்று (ஆக.28) காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்ய வந்தார். தனது அறையிலிருந்து பட்ஜெட் சூட்கேஸூடன் அவைக்கு வந்தார். அதைத்தொடர்ந்து சபாநாயகர் சிவக்கொழுந்து அவைக்கு வந்தவுடன் அவை தொடங்கியது.
அப்போது பட்ஜெட் தாக்கல் செய்ய முதல்வர் எழுந்தார். இச்சூழலில் சபாநாயகர் சிவக்கொழுந்து அவையை நடத்த அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நம்பிக்கை இல்லா தீர்மானம் சபாநாயகர் மீது தந்துள்ள சூழலில் அவர் அவையை நடத்தக்கூடாது என்றனர்.
தொடர் கூச்சல் குழப்பத்துக்கு இடையை 4-வது பட்ஜெட்டை தாக்கல் செய்து முதல்வர் நாராயணசாமி பேசத் தொடங்கினார். எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி, மாநில காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயமும் அவைக்கு அப்போது வரவில்லை.
இச்சூழலில் அதிமுக சட்டப்பேரவை தலைவர் அன்பழகன் தலைமையில், அதிமுக, என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் முன்பு சென்று கோஷமிட்டனர். இது வெற்று அறிக்கை என்று வாதிட்டனர். இதுவரை எவ்வித நடவடிக்கையும் அரசு செய்யவில்லை என்று குறிப்பிட்டனர். சபாநாயகர் முன்பு நின்றபடி கோஷமி்ட்டனர். சபாநாயகர் இருக்கைக்கு பின்னே உள்ள அறையிலிருந்து அவையை பார்த்து கொண்டிருந்த எம்.பி.வைத்திலிங்கத்திடமும் வெற்று அறிக்கை என்றனர்.
பின்னர் சபாநாயகர், முதல்வர் முன்பு அனைத்து எம்எல்ஏக்களும் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு, மக்களை ஏமாற்றாதீர்கள் என்று கோஷமிட்டனர். சபை மாண்பை குலைத்தால் சபையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களை ஒட்டுமொத்தமாக வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சபை காவலர்கள் அவர்களை வலுக்கட்டாயமாக தூக்கினர். பின்னர் அவர்கள் தொடர்ந்து அவையிலிருந்து ஒட்டுமொத்தமாக எதிர்க்கட்சிகள் வெளியேற்றப்பட்டனர்.
செ.ஞானபிரகாஷ்