

ராஜ்யசபாவில் முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்காத கட்சிகளின் ஆதரவையும் பெற வேண்டும் என்று பாஜக முயற்சி செய்து வருகிறது. பிரதமர் மோடியை சந்திக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டிருப்பது, பாஜகவின் முயற்சிக்கு பெரும் பலம் சேர்ப்பதாக அமைந்துள்ளது.
பிரதமர் பதவியேற்பு விழாவிற்கு இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையை சுட்டிக் காட்டி, அவ்விழாவை புறக்கணித்த முதல்வர் ஜெயலலிதா, பதவியேற்பு விழா நடந்த நான்கே நாட்களில் மோடியை சந்திக்க முன்வந்திருக்கிறார்.
ஜெயலலிதா - மோடி சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிக்கையில், தமிழக பிரச்சினைகளுக்கு பிரதமரின் கூடுதல் கவனத்தை முதல்வர் கோருவார் என தெரிவிக்கப்பட்டிருந்தாலும், பாஜக வட்டாரமோ வேறு எதிர்பார்ப்புடன் உள்ளது. மோடி - ஜெயலலிதா சந்திப்பின் மூலம் அதிமுகவுடன் பாஜக இன்னும் நெருக்கமாகலாம் என பாஜகவினர் கருதுகின்றனர்.
இந்த சந்திப்பின் போது, தேர்தலுக்குப் பிந்தைய அரசியல் நிலவரங்கள் குறித்தும், ராஜ்யசபாவில் அதிமுகவின் ஒத்துழைப்பு தொடர்பாகவும் மோடி பேசுவார் என பாஜக மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.