

சென்னை
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தென்மேற்கு பருவக் காற்றின் தீவிரம் தமிழகத்தில் குறைவாக உள்ளது. அதனால், தமிழகத்தில் மழை பெய்யும் பகுதிகளின் எண்ணிக்கையும், மழையின் அளவும் குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பல நகரங்களில் வெப்பம் அதிகரித்து வருகிறது. அதன்காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டு கடலூர், விழுப்புரம், கோவை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், தூத்துக்குடி, புதுக்கோட்டை, மதுரை, நாமக்கல், சேலம் ஆகிய 13 மாவட்டங்களில் ஒருசில இடங் களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும் கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப் படும். மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்ச மாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 7 செ.மீ., வால்பாறையில் 6, சின்னகல்லாரில் 5 செ.மீ. மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.