ஜெயலலிதா சொத்து தொடர்பான வழக்கு: தீபா, தீபக் ஆஜராக உத்தரவு

ஜெயலலிதா சொத்து தொடர்பான வழக்கு: தீபா, தீபக் ஆஜராக உத்தரவு
Updated on
2 min read

சென்னை 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்து தொடர்பான வழக்கில், அவரது நெருங்கிய உறவினர் களான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் வரும் 30-தேதி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு ரூ.913 கோடிக்கு மேல் சொத்துகள் உள்ளதால் அவற்றை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க வேண்டும் என கோரி சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த புகழேந்தி என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வருமான வரி பாக்கி

இந்த வழக்கு, நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்து வருகிறது. வழக்கில் ஏற்கெனவே வருமான வரித் துறை தாக்கல் செய்த பதில் மனுவில், வருமான வரி பாக்கித் தொகைக்காக ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு உள் ளிட்ட சொத்துகளை முடக்கி வைத் திருப்பதாக தெரிவித்துள் ளது.

இந்நிலையில், இந்த வழக்கு அதே அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘‘ஜெயலலிதா தன்னுடைய சொத்துகள் யாருக்கு சென்றடைய வேண்டும் என்பது தொடர்பாக எந்த உயிலும் எழுதி வைக்கவில்லை.

மக்கள் பயன்பெற...

எனவே, அவரது சொத்துகளை நிர்வகிக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அந்தஸ்தில் அல்லது ஓய்வுபெற்ற நீதிபதி யாரையாவது தனி அதிகாரியாக நியமிக்க வேண்டும். அதேபோல ஜெயலலிதாவின் சில சொத்துகள் பொதுமக்களுக்கு பயனளிக்கும் வகையில் உத்தர விட வேண்டும்’’ என வாதிடப் பட்டது.

அப்போது நீதிபதிகள், தற் போது போயஸ் கார்டன் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த வீடு தற்போது மாவட்ட ஆட்சியரின் கட்டுப்பாட்டில் உள்ளது என அரசு தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

தீபா, தீபக் தரப்பில் ஆஜ ரான வழக்கறிஞர், ‘‘ஜெயலலிதா வின் இறுதிச் சடங்குகள் போயஸ் கார்டன் இல்லத்தில்தான் நடந்தது. அதன்பிறகு எங்களைக்கூட அந்த வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. ஹைதராபாத்தில் உள்ள திராட் சைத் தோட்டம் தனியார் நிறுவ னத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 1996-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வங்கி ஒன்றி்ல் ஜெய லலிதா பெற்ற ரூ.2 கோடி கடன் தொகை தற்போது வட்டியுடன் சேர்த்து ரூ. 20 கோடியாக உயர்ந்துள்ளது’’ என்றார்.

‘‘ஜெயலலிதா செலுத்த வேண் டிய வரிபாக்கி தொகைக்காக ஏற்கெனவே போயஸ் கார்டன் உள் ளிட்ட சொத்துகள் முடக்கப்பட்டுள் ளன. ஆட்கள் பற்றாக்குறை காரணமாக போயஸ் கார்டன் வீட்டை அளவீடு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது’’ என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

வீட்டை அளவிட...

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், ‘‘வருமான வரித்துறை சார்பில் பல்வேறு இடங்களில் சோதனைகள் நடக்கிறது. எனவே, இந்த வீட்டை அளவிட அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாமே’’ என கருத்து தெரிவித்தனர்.

மேலும்,‘‘ஜெயலலிதாவின் சொத்து தொடர்பான இந்த வழக்கை பலதரப்பும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன. எனவே, இந்த வழக்கு விசாரணைக்காக ஆக.30-ம் தேதி ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in