Published : 28 Aug 2019 07:43 AM
Last Updated : 28 Aug 2019 07:43 AM

சென்னை ஐஐடி மாணவர்கள் மலிவு விலையில் தயாரித்த சிறிய குளிர்பதனப் பெட்டி; காய்கறி, பழம், பால் 3 நாட்கள் வரை கெடாது; எடுத்துச் செல்வது எளிது

டி.செல்வகுமார்

சென்னை

உரிய விலை கிடைக்காமல் காய் கறி, பழங்கள், கீரை, பால் போன்றவை வீணாகும் அவல நிலைக்கு சென்னை ஐஐடி மாணவர்கள் முடிவுகட்டியுள்ளனர். சிறு விவசாயிகளும் பயன்படுத்து வதற்கு ஏற்ப தரமான, மலிவான, சிறிய குளிர்பதனப் பெட்டியை உருவாக்கியுள்ளனர்.

ஒரு பகுதியில் வந்து கெடுக்கும் மழை, இன்னொரு பகுதியில் வராமல் கெடுக்கிறது. விவசாயம் செய்வதே சவாலான வேலையாக மாறிவருகிறது. அதிகம் கிடைத்தும் விலை கிடைக்காத காரணத்தால் தக்காளியையும், பாலையும் விவசாயிகள் சாலையில் கொட்டி போராட்டம் நடத்தும் வேதனைக் காட்சியை அடிக்கடி காண முடிகிறது.

காய்கறிகள், பழங்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்றி விற்கும் தொழில்நுட்பம் விவசாயிகளை அவ்வளவாக சென்றடையவில்லை. மேலும், காய்கறிகள், பழங்கள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை பெரிய அளவிலான குளிர்பதனக் கிடங்குகளில் மட்டுமே இருப்பு வைத்து விற்கும் நிலை உள்ளது.

இந்த சூழலில், உணவுப் பொருட்கள் விரயமாவதைத் தடுப்பது குறித்த கருத்தரங்கம் டெல்லியில் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர்கள் சிலரும் இதில் கலந்துகொண்டனர். அப் போது உதித்த யோசனையின் அடிப்படையில், சிறு விவசாயி களும் பயன்படுத்தும் வகையில் சிறிய வகை குளிர்பதன பெட்டி தயாரிக்க பயோடெக்னாலஜி ஆராய்ச்சி மாணவர்கள் சவுமால்யா முகர்ஜி, ரஜினிகாந்த் ராய், மெக் கானிக்கல் இன்ஜினீயரிங் மாணவர் ஷிவ்சர்மா ஆகியோர் முடிவு செய்தனர்.

இதுதொடர்பாக சென்னை ஐஐடி அப்ளைடு மெக்கானிக்ஸ் துறையின் உதவி பேராசிரியர் சத்யநாராயணன் சேஷாத்ரியுடன் ஆலோசனை நடத்தினர். அவரது வழிகாட்டுதலுடன், தங்கள் தயா ரிப்பு பணியை தொடங்கினர்.

தமிழகம் மட்டுமின்றி, தெலங் கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுக்குச் சென்று, அங்குள்ள விவசாயிகளி டம் குளிர்பதனப் பெட்டிக்கான தேவை மற்றும் பயன்பாடு குறித்து பேசினர். ‘‘காய்கறி, பழம், கீரை, பால் போன்றவற்றை ஓரிரு நாள் வைத்திருந்து விற்கும் வாய்ப்பு கிடைத்தால் தங்களுக்கு உரிய விலை கிடைக்கும்’’ என்று விவசாயி கள் ஏக்கத்தோடு கூறினர்.

இதையடுத்து, சிறிய குளிர் பதனப் பெட்டி தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை உருவாக்கும் முயற்சியில் மாணவர்கள்

இறங்கினர். ஒன்றரை ஆண்டு தீவிர முயற்சிக்குப் பிறகு சிறிய குளிர்பதனப் பெட்டியை அவர்கள் உருவாக்கி உள்ளனர்.

இதுகுறித்து உதவி பேராசிரியர் சத்யநாராயணன் சேஷாத்ரி கூறியது:

பால், டீ போன்றவற்றின் சூடு பதத்தை தெர்மாபிளாஸ்க் குறிப் பிட்ட நேரம் வரை தக்கவைக்கும். குளிர்பதத்தை பாதுகாக்க தெர்மல் பேட்டரியையும், சிறிய வகை குளிர்பதனப் பெட்டியையும் மாணவர்கள் உருவாக்கினர்.

தமிழகம், தெலங்கானா, புதுச் சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதை எடுத்துச் சென்று விவசாயிகள் மூலமாக சோதித்துப் பார்த்தனர். பால் உற்பத்தி நிறுவனம், மருந்து கம்பெனிகளுக்கும் இப்பெட்டியை வழங்கி, அதன் பயன்பாட்டை உறுதி செய்தனர்.

வழக்கமான ஃப்ரிஜ் போல இதை ஒரே இடத்தில் வைக்க வேண்டாம். தேவைப்படும் இடத் துக்கு எளிதாக எடுத்துச் செல்ல லாம். இதில் காய்கறி, பழம், கீரை, பால், மருந்துகளை 24 மணி முதல் 72 மணி நேரம் வரை தரம் குறையாமல் பாதுகாப்பாக வைக்க முடியும் என்று சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஃப்ரிஜ்ஜில் வைக்கப்படும் உணவுப் பொருட்கள் உலர்ந்து விடும். ஆனால், இப்பெட்டியில் உணவுப் பொருட்கள் எந்த ஈரப்பதத்தில் வைக்கப்படுகிறதோ, அதே ஈரப்பதத்தில் இருப்பது இதன் சிறப்பம்சம்.

இயற்கை விவசாயத்தில் உற் பத்தியாகும் உணவுப் பொருட் களை இப்பெட்டியில் எடுத்துச் செல்ல விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். காஞ்சிபுரம் மாவட் டம் வடகரம்பட்டி கிராமத்தில் உள்ள ஒரு மையத்தில் 5 பெட்டிகளை வைத்து சோதனை செய்தோம். இதுபோல 5 மாநிலங்களில் 45 பெட்டிகள் சோதனைக்காக வைக்கப்பட்டுள்ளன.

இந்த சிறிய குளிர்பதனப் பெட்டி 58 லிட்டர் கொள்ளளவு கொண்டது. 15 அடி உயரத்தில் இருந்து விழுந்தாலும் உடையாது. குட்டி யானை போன்ற வாகனங்களில் எளிதாக ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி எடுத்துச் செல்லலாம். ஒரு பெட்டியின் விலை ரூ.5 ஆயிரம்.

புதிய நிறுவனம் தொடக்கம்

மாதத்துக்கு ஆயிரம் பெட்டி கள் வரை தயாரிக்கலாம். சிறிய, பெரிய விவசாயிகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆர்டர் கொடுத்தால் ஒன்றரை மாதத்தில் எத்தனை பெட்டிகள் தயாரித்துக் கொடுக்க வும் மாணவர்கள் தயாராக உள்ளனர். இதற்காக ‘Tan 90’ என்ற புதிய நிறுவனத்தை மாணவர்கள் தொடங்கியுள்ளனர். பல தனியார் நிறுவனங்கள் இதை வாங்கி விற்க முன்வந்துள்ளன.

அரசு மொத்தமாக ஆர்டர் கொடுத்து மாணவர்களை ஊக்கப் படுத்தினால், விவசாயிகளுக்கு தரமான, மலிவான, வசதியான குளிர்பதனப் பெட்டி கிடைக்கும். அவர்களது நஷ்டம் தவிர்க்கப்பட்டு, விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும்.

விவசாயிகளின் தேவை, பயன்பாட்டைப் பொருத்து மாண வர்களின் கண்டுபிடிப்பு அடுத்த கட்டத்தை நோக்கி நகரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x