

சென்னை
ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு டாக்டர்கள் நேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறு வதில் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர டாக்டர்களுடன் அரசு பேச்சுவார்த்தை நடத்தியது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனை களில் பணியாற்றும் டாக்டர்களின் எண் ணிக்கையை அதிகரிப்பது, ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் பலன் ஏதும் இல்லாததால், அரசுக்கு அழுத்தம் கொடுக் கும் வகையில் தமிழ்நாடு அரசு டாக்டர் கள் கூட்டமைப்பை தொடங்கி மீண்டும் தொடர் போராட்டங்களில் டாக்டர்கள் ஈடுபடத் தொடங்கினர்.
இதன்படி, கடந்த மாதம் 29-ம் தேதி ஒத்துழையாமை இயக்கம் நடத்தியும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை நிறுத்தியும், குடும்பத்தினருடன் மனித சங்கிலியும் நடத்தினர். இதனைத் தொடர்ந்து டாக்டர் கள் பெருமாள் பிள்ளை, நளினி, நாச்சி யப்பன், அனிதா, அகிலன், ரமா ஆகியோர் சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தை கடந்த 23-ம் தேதி தொடங்கினர். உடல்நிலை மோச மடைந்ததால் டாக்டர்கள் நாச்சியப்பன், ரமா, நளினி, அனிதா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற இருவரும் நேற்று 5-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
இவைதவிர, ஏற்கெனவே அறிவித்த படி கோரிக்கைகளை நிறைவேற்ற வலி யுறுத்தி 24 மணி நேரம் வேலைநிறுத் தப் போராட்டத்தை தமிழகம் முழுவதும் டாக்டர்கள் நேற்று காலை 7.30 மணிக்கு தொடங்கினர். புறநோயாளிகள் பிரிவு, உள்நோயாளிகள் பிரிவுகளை புறக் கணித்தும் திட்டமிட்ட அறுவைச் சிகிச்சை களை நிறுத்தியும் போராட்டம் நடத்திய தால் மருத்துவமனைகளுக்கு வந்த நோயாளிகள் சிகிச்சைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. சென்னை, மதுரை, திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், புதுக்கோட்டை, நாகை, தஞ்சாவூர், கோவை, ராமநாதபுரம், நெல்லை, கடலூர், விழுப்புரம், நாமக்கல், சிவகங்கை, தேனி உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் உள்ள தலைமை மருத்துவமனைகளிலும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலிலும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டது. பல இடங்களில் குறைந்த எண்ணிக்கையில் மருத்துவர்கள் பணியில் இருந்ததையும் காண முடிந்தது.
இதனால் மருத்துவமனைக்கு வந்த புறநோயாளிகள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்துவிட்டு, டாக்டர்கள் இல்லாத தால் பின்னர் கலைந்து சென்றனர். அவசர சிகிச்சை மற்றும் பிரசவ வார்டுகளில் மட்டும் டாக்டர்கள் பணியில் இருந் தனர். டாக்டர்களின் வேலைநிறுத்தத் தால் தமிழகம் முழுவதும் அரசு மருத் துவமனைகளில் 7 லட்சத்துக்கும் அதிக மான புற நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்கவில்லை. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட டாக்டர்களை திமுக பொருளாளர் துரைமுருகன் சந்தித்துப் பேசினார். திமுக எம்எல்ஏ-க்கள் ரங்கநாதன், சேகர்பாபு உடனிருந்தனர்.
சென்னையில் பாதிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பணி யாற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் நேற்று சென்னை அரசு பொதுமருத்துவமனைக்கு வந்து போராட் டத்தில் ஈடுபட்டனர். பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு, மருத் துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கு நர் சுவாதி, மருத்துவமனை டீன் ஜெயந்தி ஆகியோர் நேரில் வந்து பணிக்கு திரும் பும்படி டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், போராட்டத்தை கைவிட அரசு டாக்டர்கள் திட்டவட்ட மாக மறுத்துவிட்டனர்.
அரசு டாக்டர்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தால் சென்னை அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, அரசு ஸ்டான்லி மருத் துவமனை உள்ளிட்ட பல்வேறு அரசு மருத்துவமனைகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஏழை நோயாளிகள் சிகிச்சைப் பெற முடியாத நிலை ஏற்பட்டது.
அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் பற்றி தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறும்போது, “மருத்துவ சேவை என்பது மகத்தான சேவை. அந்த பணியினை செய்யும் டாக்டர்கள் வேலை நிறுத்தம் செய்வதால் பொதுமக்கள் பாதிக் கப்படுவார்கள். நோயாளிகள் பாதிக்கப் படும் வகையிலும் தங்களுடைய உடல் நலம் பாதிக்கும் வகையிலும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது வருத்தம் அளிக் கிறது. கோரிக்கைகளை தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது” என்றார்.
இதனிடையே, பேச்சுவார்த்தை நடத்த டாக்டர்கள் சங்க நிர்வாகிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்தது. தலைமைச் செயலகத்தில் பகல் 12 மணிக்கு சுகா தாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தலைமையில் பேச்சுவார்த்தை தொடங் கியது. அரசு தரப்பில் சுகாதாரத்துறை இணை செயலாளர் நடராஜன், தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் செந்தில்ராஜ், பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி, மருத்துவ கல்வி இயக்குநர் நாராயண பாபு, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் சுவாதி, அரசு பொது மருத்துவமனை டீன் ஜெயந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
இதேபோல் டாக்டர்கள் தரப்பில் ஜன நாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத் தின் தலைவர் பி.பாலகிருஷ்ணன், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத் தலைவர் லட்சுமி நரசிம்மன், அமைப்புச் செயலாளர் ஏ.ராம லிங்கம், அரசு அனைத்து மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் சுந்தரேசன் உட்பட 10 பேர் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டனர்.
இரவு 8 மணி வரை நீடித்த இந்த பேச்சு வார்த்தையில், கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்ய ஐஏஎஸ் அதி காரியை நியமிப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க திட்ட இயக்குநர் செந்தில்ராஜ் நியமிக்கப்பட்டார்.