Last Updated : 27 Aug, 2019 05:39 PM

 

Published : 27 Aug 2019 05:39 PM
Last Updated : 27 Aug 2019 05:39 PM

பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதியில் படகு வடிவில் அலங்கார வர்த்தக கட்டிடம்: தொடரும் கேரள அரசின் விதிமுறை மீறல்கள்

குமுளி,

பெரியாறு அணையின் நீர்பிடிப்புப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளைக் கவர படகு வடிவிலான வர்த்தக அலங்கார கட்டிடத்தை கேரள அரசு கட்டி வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை மூலம் தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் குடிநீர் மற்றும் பாசன வசதி பெற்று வருகின்றன.

தென்தமிழகத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் இந்த அணைப்பகுதியில் வெளியில் தெரியாத விதிமுறைகள் மீறல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

கேரளப் பகுதிக்கு நீர் வெளியேறும் பகுதியில் பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டன. நீர்பிடிப்புப் பகுதியான ஆனவச்சால் பகுதியில் மண் மேவப்பட்டு வாகன நிறுத்தமாக மாற்றப்பட்டுள்ளது.

இதே போல் தேக்கடியின் பல இடங்களில் விதிமுறை மீறிய கட்டடங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 142 அடி நீர் தேக்கினால் இந்த கட்டிடங்களுக்குள் நீர் புகுந்துவிடும் நிலை உள்ளது. இதை ஒரு காரணமாகக் கூறி வரும் காலங்களில் நீர்மட்டத்தை உயர்த்துவதில் இடையூறு செய்ய வாய்ப்புள்ளது.

படகு இயக்கத்தை கைப்பற்றியது, வல்லக்கடவுசாலை, குமுளி-தேக்கடி சாலைகளை தங்கள் கட்டுப்பாட்டிற்குள்கொண்டு வந்தது. அணைப்பகுதியில் மின் இணைப்புகளை துண்டித்து தமிழக அதிகாரிகள் தங்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்தியது என்று கேரள அரசின் அத்துமீறல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் தேக்கடி படகு இயக்கப்பகுதியில் வர்த்தக கட்டிடங்களை கட்டி வருகிறது. படகு போன்ற அமைப்பில் ஓட்டல், அருகிலேயே சுற்றுலாப்பயணிகளுக்குத் தேவையான தின்பண்டங்களை விற்பனை செய்ய அலங்காரமான கட்டடங்களும் தற்போது கட்டப்பட்டு வருகின்றன.
இது படகு இயக்கத்திற்கு மிக அருகில் உள்ள நீர்பிடிப்புப்பகுதிகளில் கட்டப்படுகின்றன. இதுவரை நடைபெற்ற எந்த விதிமுறை மீறல்களையும் தமிழகஅரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருவதால் தொடர்ந்து அடுத்தடுத்த நிலைக்கு கேரள அரசு சென்று கொண்டிருக்கிறது.
இதுபோன்று நீர்ப்பிடிப்புப் பகுதிகளின் பரப்பளவு குறைந்து கொண்டே செல்வதால் நீர் சேகரமாவதிலும், தேங்குவதிலும் சிக்கல் உருவாகி வருகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மதுரை மண்டலச் செயலாளர் திருப்பதிவாசகன், "கடந்த 30 ஆண்டுகளாகவே இது போன்ற பல்வேறு இடையூறுகளை கேரள அரசு செய்து கொண்டே இருக்கிறது.

நீர்மட்டத்தை குறைத்தது, கேரளப் பகுதியில் தடுப்பணைகளை கட்டி தமிழகத்திற்கான 20 சதவீத தண்ணீரை தங்கள் பகுதிக்கு கொண்டு சென்றது, நீர்பிடிப்புப்பகுதிகளில் அதிகளவில் கட்டிடங்களை உருவாக்கியது என்று அணைப்பகுதிகளில் அத்துமீறல்களை அதிகளவில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதிகாரிகள் கண்காணித்து தமிழக அரசு உதவியுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x