

மாமல்லபுரம்
மாமல்லபுரத்தில் மூடப்பட்ட கலங்கரை விளக்கம், தீவிரவாத அச்சுறுத்தல் குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு இன்று பிற்பகல் மீண்டும் திறக்கப்பட்டது.
காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் குடவரை சிற்பங்களான கடற்கரை கோயில், கிருஷ்ண மண்டபம், அர்ஜூனன் தபசு உள்ளிட்ட கலைச் சின்னங்கள் அமைந்துள்ளன. யுனெஸ்கோ நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற இந்த கலைச் சின்னங்களை பார்வையிட, வெளிநாடு மற்றும் உள்ளூரிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதால் சர்வதேசச் சுற்றுலா தலமாக மாமல்லபுரம் விளங்கி வருகிறது.
கிருஷ்ண மண்டபத்தின் மேல்பகுதியில் உள்ள பாறை குன்றில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட கலங்கரை விளக்கம், கப்பல்களுக்கு வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த 2013ம் ஆண்டு கலங்கரை விளக்கம் புதுப்பிக்கப்பட்டும் மற்றும் கப்பல்களில் பயன்படுத்தப்பட்ட பொருட்களின் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டது. இதனை, சுற்றுலா பயணிகள் கட்டணம் செலுத்தி காலை 10 மணி முதல் மற்றும் மாலை 5 மணிவரையில் பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாகவும் மற்றும் நாசவேலை அச்சுறுத்தல் உள்ளதாகவும் உளவுத்துறை எச்சரிக்கை தெரிவித்தது. இதனால், முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் அணுமின் நிலையங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதன்பேரில், கல்பாக்கம் அணு மின் நிலையம் அருகே உள்ளதால் மாமல்லபுரம் கலங்கரை விளக்கத்தை சுற்றுலாப் பயணிகள் பார்வையிட தடை விதிக்கப்பட்டு, 25-ம் தேதி மூடப்பட்டது.
இந்நிலையில், தீவிரவாத அச்சுறுத்தல் இல்லை என மாவட்ட உளவுத்துறை அளித்த தகவலின் பேரில், கலங்கரை விளக்கம் மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்கு இன்று பிற்பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கம்போல் சுற்றுலாப் பயணிகள் கலங்கரை விளக்கம் மற்றும் அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டு வருகின்றனர்.