Published : 27 Aug 2019 03:42 PM
Last Updated : 27 Aug 2019 03:42 PM

வேதாரண்யம்  அம்பேத்கர் சிலை: பாதுகாப்புக்காக இரும்புக் கூண்டு அமைப்பு

நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் அம்பேத்கர் சிலையைப் பாதுகாக்க, சிலையைச் சுற்றிலும் இரும்புக் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கடந்த 25-ம் தேதி (ஞாயிறு) மாலை இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில், பேருந்து நிலைய வளாகத்தில் இருந்த அம்பேத்கரின் முழு உருவ சிலை சேதப்படுத்தப்பட்டது. ஒரு கார் தீ வைத்து எரிக்கப்பட்டது. இரு பிரிவினரும் பயங்கரமாக மோதிக் கொண்ட நிலையில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பொதுமக்கள் பயந்து ஓடினர். கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

அதையடுத்து திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வரதராஜுலு, தஞ்சை சரக காவல்துறை துணை தலைவர் லோகநாதன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேகரன் ஆகியோர் சம்பவ இடங்களைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஏராளமான போலீஸார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே அடுத்த 12 மணி நேரத்திற்குள் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து 6 அடி உயர அம்பேத்கர் சிலை வரவழைக்கப்பட்டு, நேற்று (திங்கள்) அதிகாலை சேதப்படுத்தப்பட்ட சிலை இருந்த அதே பீடத்தில், புதிய அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது. இதைப் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.

சுற்றிலும் இரும்புக் கூண்டு வேதாரண்யம் பகுதியில் இயல்பு நிலை திரும்பியதை அடுத்து நேற்று முதல் கடைகள் திறக்கப்பட்டன. இருப்பினும் போலீஸார் தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவம் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்த 28 பேரை போலீஸார் கைது செய்தனர். சிலையைப் பாதுகாப்பதற்காக இன்று சிலையைச் சுற்றிலும் இரும்புக் கூண்டு அமைக்கப்பட்டது.

முன்னதாக மற்றொரு சமூக அமைப்பைச் சேர்ந்த ஆர்.சரவணன் உள்ளிட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். இன்று இரு தரப்பையும் சேர்ந்த மேலும் 7 பேர், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

- தாயு.செந்தில் குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x