தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ பதில்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் சிபிஐ பதில்
Updated on
1 min read

சென்னை

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில் விரிவான விசாரணை நடந்து வருகிறது. விரைவில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என சிபிஐ தரப்பு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலன் ஹரிதாஸ் வாதத்தில், “மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாகவும், அதன் அடிப்படையில், ஆலையை மூட வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழக அரசு, எந்த முன்னறிவிப்பும் இன்றி தடை உத்தரவை பிறப்பித்து, துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியானார்கள். ஸ்டெர்லைட் ஆலையை மூடியே ஆகவேண்டும்”. என வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ மற்றும் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையத்தின் விசாரணை நிலை குறித்து ஆகஸ்ட் 27ல் தகவல் தெரிவிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இன்று சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி தூத்துக்குடி துப்பாக்கி சூடு சிபிஐ விசாரணை குறித்த ஒரு பக்க குறிப்பு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், “துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. 2018 ஆகஸ்ட் 14-ல் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின் அடிப்படையில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாகவும், அதிகாரிகள் தொடர்பு சம்பந்தமாகவும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர தமிழக காவல்துறை பதிவுசெய்த 207 வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றப்பட்டு, அதுவும் விசாரிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட காவல்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனைகள், தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிடம் ஆவணங்களும், சிசிடிவி காட்சிகளும் பெறப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சிசிடிவி பதிவுகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் செப்டம்பர் 16-ல் விசாரணை நிலை குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டுமென்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு உறுதியாக அமல்படுத்தப்படும் எனவும் சிபிஐ தரப்பு உத்தரவாதம் அளித்தது.

பலியான 13 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தபட்டுள்ளது. கலவரம் தொடர்பான விசாரணையில் காவல்துறை, வருவாய் துறை, போராட்டகாரர்கள் என அனைத்து தரப்பிலும் விசாரிக்கப்பட்டு வருகிறது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சிபிஐ அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் குறித்த நீதிபதி அருணா ஜெகதீசன் விசாரணை நிலவரம் குறித்து தகவல் மதியம் தெரிவிப்பதாக நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in