Published : 27 Aug 2019 01:00 PM
Last Updated : 27 Aug 2019 01:00 PM

அரசு மருத்துவர்கள் போராட்டம்; மக்களின் உயிரோடு விளையாட வேண்டாம்: தமிழக அரசுக்கு தினகரன் வலியுறுத்தல்

மற்றவற்றைப் போலவே இதிலும் அலட்சியம் காட்டி மக்களின் உயிரோடு விளையாடாமல் உரிய தீர்வினைக் காண வேண்டும் என்று அதிமுக அரசை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தி உள்ளார்.

தமிழகத்தில் அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் டாக்டர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் சென்னை அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 23-ம் தேதி தொடங்கினர். தொடர்ந்து மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு நள்ளி ரவில் மருத்துவமனைக்கு வந்து உண்ணாவிரதத்தைக் கைவிடும்படி டாக்டர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்று டாக்டர்கள் திட்டவட்டமாக அவரிடம் தெரிவித்தனர்.

அரசியல் கட்சிகள் ஆதரவு

இதற்கிடையே, உண்ணாவிரதம் இருந்துவரும் அரசு டாக்டர்களை நேற்று திமுக எம்.பி.க் கள் ஆர்.எஸ்.பாரதி, டிகேஎஸ்.இளங்கோவன், இந்திய கம்யூ னிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ''தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் மேற்கொண்டு வரும் தொடர் உண்ணாவிரதம், வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களினால் ஏழை, எளிய நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மற்ற மாநிலங்களில் வழங்குவது போன்ற சரியான ஊதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் உயிர் காக்கும் மருத்துவர்களை அழைத்துப் பேச வேண்டும். அவர்களின் போராட்டங்களை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டிய பொறுப்பு பழனிசாமி அரசுக்கு இருக்கிறது.

மற்றவற்றைப் போலவே இதிலும் அலட்சியம் காட்டி மக்களின் உயிரோடு விளையாடாமல் உரிய தீர்வினைக் காண வேண்டும் என வலியுறுத்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x