Published : 27 Aug 2019 10:45 AM
Last Updated : 27 Aug 2019 10:45 AM

அரசுக்கு எதிராக யார் போராடினாலும் ஆதரிப்பதுதான் எதிர்க்கட்சிகளின் வேலையா?- தமிழிசை கேள்வி

சென்னை

அரசுக்கு எதிராக யார் போராடினாலும் மக்களை மறந்து, அவர்களை ஓடோடி ஆதரிப்பதுதான் எதிர்க்கட்சிகளின் வேலையா? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய அரசு மருத்துவர்களின் ஊதியத்திற்கு இணையான ஊதியம் கேட்டு தமிழக அரசு மருத்துவர்கள் போராடி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை நியாயமானதாக இருந்தாலும் ஏழை, எளிய மக்களின் மருத்துவத் தேவைகளை பாதிக்கும் வேலை நிறுத்தம் தவிர்க்கப்பட வேண்டும்.

ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதால் அரசு மருத்துவர்களும், அரசும் அமர்ந்து பேசி உடனே தீர்வு காணவேண்டும். கோரிக்கைகள் நியாயமானவையாக இருந்தாலும் அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்கும் ஏழை நோயாளிகள் சிகிச்சை எந்தவிதத்திலும் பாதிக்கக்கூடாது என்பதற்காக வேலைநிறுத்தம் தவிர்க்கப்படவேண்டும்

ஆளும் அரசுக்கு எதிராக யார் போராடினாலும் மக்கள் நலனை மறந்து, உடனே ஓடோடி அவர்களை ஆதரிப்பதுதான் எதிர்க்கட்சிகளின் வேலையா?

காஷ்மீரில் மருந்துகள் கிடைக்கவில்லை, மருத்துவமனைகள் இயங்கவில்லை என காஷ்மீர் மக்களுக்கு ஆதரவாகப் பேசுவதாக பாகிஸ்தான் குரலை ஒலிக்கும் திமுக, இடதுசாரிகள் இங்கே தமிழக ஏழை, எளிய மக்களின் மருத்துவத் தேவையைப் பாதிக்கும் அரசு மருத்துவமனைகளின் வேலை நிறுத்தத்தை ஆதரிப்பது ஏன்? இது தமிழ் மக்களைப் பாதிக்காதா?

மத்திய அரசு மருத்துவர்களின் ஊதியத்துக்கு ஈடாக வழங்க வேண்டுமென தமிழக மருத்துவர்கள், தமிழக முதலமைச்சரின் விரிவாக்கக் காப்பீட்டுத் திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைக்க மறுப்பது என்ன நியாயம்? இதனால் பாதிப்படைவது சாமானிய மக்கள் தானே ... இதனால் அரசுக்கும் இழப்பு அல்லவே...

எனவே ஏழை, எளிய மக்களின் உயிர் காக்கும் மருத்துவப் பணி இறைப் பணிக்கு இணையானது. அரசு மருத்துவர்களே ஏழை, எளிய மக்களின் நம்பிக்கை நட்சத்திரம் என்பதை எக்காலத்திலும் மக்கள் நினைவு கூறும் வகையில் இத்தகைய போராட்டங்கள் தவிர்க்கப்படவேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x