

தருமபுரி
நவீன மாற்றங்களுக்கு மத்தியிலும் தருமபுரி மாவட்ட மானாவாரி நிலங்களில், கேழ்வரகு வயல்களில் ‘பளுக்கு’ ஓட்டும் பாரம்பரிய விவசாய தொழில்நுட்பத்தை விவசாயிகள் கடைப்பிடித்து வருகின்றனர். இதன் மூலம் அதிக மகசூல் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
தருமபுரி மாவட்டத்தில் பென்னாகரம், தொப்பூர், பெரும் பாலை, பாப்பாரப்பட்டி, பாலக் கோடு, கடத்தூர், மொரப்பூர் உள்ளிட்ட பெரும்பாலான பகுதி களில் மானாவாரி நிலங்கள் உள்ளன. அவற்றில், விவசாயிகள் தங்களின் விருப்பத்துக்கு ஏற்பவும், முந்தைய ஆண்டில் நடவு செய்யப்பட்ட பயிருக்கு மாற்றப் பயிர் என்ற முறையிலும் பயிர்களை தேர்வு செய்து விதைப்பு செய்வர். அந்த வகையில், அண்மையில் பெய்த மழையால் மானாவாரி நிலங்களில் கேழ்வரகு, நிலக்கடலை, சோளம், சாமை, திணை போன்ற பயிர்களை விதைப்பு செய்துள்ளனர்.
பாரம்பரிய நடைமுறை
இவ்வாறு விதைக்கப்பட்ட கேழ்வரகு பயிர்களில், கடந்த காலங்களில் ‘பளுக்கு’ ஓட்டுதல் என்ற பாரம்பரிய நடைமுறை பின்பற்றப்படும். தற்போது வழக்கொழிந்து வரும் நிலையிலும், சில இடங்களில் விவசாயிகள் இதை பின்பற்றி வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் இந்த பளுக்கு ஓட்டும் பணியில் தற்போது விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து பென்னாகரம் பகுதி விவசாயி கோவிந்தசாமி கூறியதாவது:
கேழ்வரகு சாகுபடியில் ஓரிடத்தில் குறிப்பிட்ட நாட்கள் வரை நெருக்கமாக நாற்று வளர்க்கப்படும். பின்னர் நாற்றுகளை வேருடன் பறித்து, ஏற்கெனவே உழவு முடித்து வைக்கப்பட்ட நிலத்தில் மழை ஈரத்தில் ஆட்கள் மூலம் நடவு செய்யப்படுவது ஒருமுறை. உழவு மாடுகள் மூலம் படைகள் அமையும் வகையில் நிலத்தில் உழவு செய்யப்படும். அந்த படையின் நீளத்துக்கு ஏற்ப ஆட்கள் சாரியாக நின்று கொள்வர்.
உழவு மாடு தங்களை கடந்து படை அமைத்தபடி சென்றவுடன் கையில் உள்ள பயிர்களை அந்த படையில் ஊன்றி நடவு செய்வர். மாடுகள் அடுத்த சுற்று வரும் போது, முந்தைய சாரியில் நடவு செய்யப்பட்ட பயிர்களுக்கு நன்றாக மண் அணைந்து கொள்ளும்.இவ்வாறு நடவு செய்வது ஒரு முறை.
குட்டை கலப்பை
இதுதவிர, மானாவாரி நிலத்தில் பதமான ஈரத்தின்போது வயல் முழுக்க கேழ்வரகு விதையை விதைத்து விட்டு பின்னர் உழவு மாடுகள் மூலம் உழவடித்து விடும் முறையும் உண்டு. முனைப் பகுதி நன்றாக தேய்ந்து போன குட்டை கலப்பை என்று அழைக்கப்படும் கலப்பைகளை இந்த உழவுக்கு பயன் படுத்துவர். இந்த முறையில் உழவு செய்யும்போது, விதைக் கப்பட்ட கேழ்வரகு மண்ணில் அதிக ஆழத்துக்கும் செல்லாது. பறவைகள், எறும்புகள் போன்ற வற்றுக்கு இரையாகி வீணாகும் வகையில் மண்ணுக்கு வெளியிலும் கேழ்வரகுகள் நிற்காது.
இவ்வாறு விதைக்கப்பட்ட கேழ்வரகு, வயல் முழுக்க முளைத்து வளரத் தொடங்கும்.
இதில், 15 முதல் 20 நாட்களுக்கு பின்னர் இந்த வயலில் ‘பளுக்கு’ ஓட்டும் பணியை மேற்கொள்வோம். ஈரம் குறைவினாலோ வேறு காரணங்களாலோ வயலில் பயிர் குறைவாக முளைத்து விட்டால் விளைச்சல் பாதிக்கும் என்பதால் சற்றே கூடுதலாக தானியத்தை விதைப்பு செய்வோம். அவை முழுவதுமாக முளைத்து விடும் நிலையில், அப்படியே விட்டால் பயிர்களின் நெருக்கம் காரணமாக விளைச்சல் பாதிக்கும். எனவே, பளுக்கு ஓட்டுதல் என்ற முறையின் மூலம் பயிர்களுக்கு இடையே குறிப்பிட்ட இடைவெளியை ஏற்படுத்தி விட வேண்டும்.
சீப்பு தோற்ற கலப்பை
தலை வார பயன்படுத்தப்படும் சீப்பு போன்ற தோற்றம் கொண்ட பிரத்தியேக கலப்பையை இதற் காக பயன்படுத்துவோம். இக் கலப்பையின் முனைகளில் சிக்கும் பயிர்களின் வேர்கள் பெயர்ந்து அந்த பயிர்கள் அன்றைய பொழுதிலேயே காய்ந்து விடும். கலப்பை முனைகளிலும், மாடுகளின் கால் குளம்புகளிலும் சிக்காமல் தப்பிய பயிர்கள் புதிய வேகத்துடன் வளர்ந்து நல்ல விளைச்சலை கொடுக்கும். விவசாய கிராமங்கள் அனைத்திலும் பரவலாக பின்பற்றப்பட்ட இந்த பாரம்பரிய நடைமுறைகள் நவீன வரவுகள் மற்றும் மாற்றங்களின் காரணமாக வழக்கொழிந்து வருகிறது.
தற்போது, தருமபுரி மாவட்டத்தில் ஆங்காங்கே ஓரளவு எஞ்சியிருக்கும் இந்த பாரம்பரிய விவசாய தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் இளம் தலைமுறையினருக்கு காணக் கிடைக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.