Published : 27 Aug 2019 06:57 AM
Last Updated : 27 Aug 2019 06:57 AM

பாரதியார் நினைவு தின முரண்பாடு சரிசெய்யப்பட வேண்டும்: செப்.12-ம் தேதி என அறிவிக்க தமிழ் ஆர்வலர்கள், ஆய்வாளர்கள் வலியுறுத்தல்

எட்டயபுரத்தில் பாரதியார் நினைவு இல்லத்தில் இறப்பு தேதி திருத்தம் செய்யப்பட்ட கல்வெட்டு.

வீ.தமிழன்பன்

காரைக்கால்

மகாகவி பாரதியார் நினைவு தினம் குறித்த முரண்பாடு சரிசெய்யப்பட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர் களும், ஆய்வாளர்களும் வலி யுறுத்தி உள்ளனர்.

தனது இறுதிக் காலத்தில் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த பாரதியார், தனது 39-வது வயதில் 1921-ம் ஆண்டு செப்.11-ம் தேதி நள்ளிரவு ஒன்றரை மணிக்கு மேல் இறந்துள்ளார். அதனால், நள்ளிரவு 12 மணிக்கு மேல் என்பது அடுத்த நாள் கணக்கில்தான் வரும் என்பதால் செப்.12-ம் தேதி பாரதியார் இறந்ததாகக் குறிப்பிட்டு அவரது உறவினர்கள் சரியான முறையில் பதிவு செய்துள்ளனர்.

ஆனால், அப்போதைய மரபு வழக்கப்படி சில புத்தகங்களிலும், பேச்சு வழக்கிலும் செப்.11-ம் தேதி இறந்ததாகவே குறிப்பிடப்பட்டு பின்னர் அதுவே நிலைத்துவிட்டது. ஆனால், சென்னை மாநகராட்சியில் உள்ள பதிவேடு செப்.12-ம் தேதி பாரதியார் இறந்ததாகக் குறிப்பிடுகிறது.

இதுகுறித்து பாரதி ஆய்வாள ரும், மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவருமான காரைக்காலை பூர்வீகமாகக் கொண்ட முனைவர் ச.சுப்புரெத்தினம், தமிழகம் மற்றும் புதுச்சேரி அரசுகளின் கவனத்துக்கு கொண்டு சென்று நினைவு தினம் செப்.12 என அதிகாரப்பூர்வமாக தேதியை மாற்ற கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இவரது முயற்சியின் பயனாக, தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பாரதியார் நினைவு இல்ல மணி மண்டபத்தில் உள்ள கல்வெட்டில் பாரதியார் இறந்த நாள் செப்.12 என மாற்றம் செய்யப்பட்டது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

ஆனால், தமிழக அரசின் அரசித ழிலும், அதிகாரப்பூர்வ அறிவிப்பி லும் பாரதியாரின் நினைவு நாள் செப்.12 என அறிவிக்கப்படாததால் கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது அமைப்புகளால் செப்.11-ம் தேதியே பாரதியாரின் நினைவு நாளாக அனுசரிக்கப்படுகிறது. இது மிகப்பெரிய வரலாற்றுப் பிழை, இந்த முரண்பாடு அதிகாரப்பூர்வ மாக களையப்பட வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்..

கல்வெட்டில் திருத்தம்

இதுகுறித்து முனைவர் சு.சுப்பு ரெத்தினம் கூறியது: இந்த தவறு நீக்கப்பட வேண்டும் என்பதற்காக பாரதியாரின் இறப்புச் சான்றித ழைப் பெற்று தமிழக அரசின் கவ னத்துக்கு கொண்டு சென்றேன். அதனடிப்படையில், 93 ஆண்டு களாக இருந்த வரலாற்றுப் பிழை 2014-ம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வராக இருந்தபோது எட்டயபுரத்தில் உள்ள கல்வெட்டில் திருத்தம் செய்யப்பட்டது. அப் போது முதல் அங்கு செப்.12-ம் தேதி பாரதியார் நினைவு நாளை தமிழக அரசு அனுசரித்து வருகிறது.

ஆனால், 1982-ல் கொல்கத் தாவில், 1987-ல் டெல்லியில் என நாடு முழுவதும் எத்தனையோ இடங்களில் நிறுவப்பட்ட பாரதி யார் சிலைகளின் பீடங்களில் தேதி திருத்தப்பட்டதாகத் தெரிய வில்லை.

நாம் பயன்படுத்தும் நாட்காட்டி களிலும், பள்ளி - கல்லூரி பாடக் குறிப்புகளிலும், போட்டித் தேர் வுக்கான குறிப்புகளிலும் திருத்தப் பட்ட தேதி குறிப்பிடப்படவில்லை. அகில இந்திய வானொலியும், தொலைக்காட்சியும் செப்.11-ம் தேதியிலேயே பாரதியாரின் நினைவுதின நிகழ்ச்சிகளை நடத்துகின்றன.

இதுகுறித்து 1993-ம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் தமிழக அரசுக்கும், புதுச்சேரி அரசுக்கும் மனு அளித்து வருகிறேன். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்திடம் அளித்த மனுவுக்கு பதில் அளிக்கும்விதமாக, "பாரதியாரின் இறப்பு செப்.12 என்பது மாநகராட்சி பதிவுப்படி சரிதான்” என்று குறிப்பிட்டு சென்னை மாவட்ட கூடுதல் பிறப்பு இறப்பு பதிவாளர் அண்மையில் எனக்கு கடிதம் அனுப்பியுள்ளார். எனது முயற்சியின் பயனாக புதுச்சேரியில் உள்ள பாரதியார் இல்லத்தில் அவரது இறப்புச் சான்றிதழ் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

பாரதியாரின் நினைவு தினம் செப்.12 என தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அரசிதழில் அறிவித்தால்தான் நாடு போற்றும் மகாகவியான பாரதியாரின் நினைவு தினம் குறித்த வரலாற்றுப் பிழை முற்றிலும் நீக்கப்பட்டதாக உணரப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x