காஷ்மீர் விவகாரம்; திமுக குறித்து அவதூறு: காவல் ஆணையரிடம் ஆர்.எஸ்.பாரதி புகார்

காஷ்மீர் விவகாரம்; திமுக குறித்து அவதூறு: காவல் ஆணையரிடம் ஆர்.எஸ்.பாரதி புகார்
Updated on
2 min read

‘திமுக தடைசெய்யப்பட வேண்டுமா?’ என்ற தலைப்பில் மாரிதாஸ் என்பவர் சமூகவலைத்தளங்களில் திமுகவைப்பற்றி அவதூறுப் பிரச்சாரம் செய்து வருவதாக திமுக எம்.பி. ஆர்.எஸ். பாரதி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்து, திமுக தன் எதிர்ப்பு நிலைப்பாட்டை தெரிவித்து வருகிறது. டெல்லியில் திமுக தலைமையில் கூட்டணி கட்சி எம்.பி.க்களுடன் காஷ்மீர் விவகாரம் குறித்து தன் எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில் கண்டன ஆர்பாட்டம் நடத்தியது, தொடர்ச்சியாக காஷ்மீர் விவகாரத்தில் அங்கு இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்று தன் நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகிறது.

இதற்கிடையே திருமண நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலின் காஷ்மீர் விவகாரத்தில் மாறுபட்ட வகையில் பேசியதாக தகவல் எழுந்தது, இதை சமூகவலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து கருத்து தெரிவித்தனர்.

மாரிதாஸ் என்பவர் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக திமுக குறித்து அவதூறு பரப்புவதாக புகார் எழுந்தது, குறிப்பாக காஷ்மீர் விவகாரத்தில், 370ம் சட்டப்பிரிவு நீக்கப்பட்டது குறித்த திமுகவின் நிலைப்பாடு ஹிஸ்புதின், லஷ்கர் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும்.

திமுக பாகிஸ்தானிடமிருந்து பணம் பெற்றதா அல்லது அறிக்கைகளை வெளியிட தீவிரவாதக் குழுக்களுடன் புரிதல் மேற்கொண்டுள்ளதா? போன்ற கருத்துக்களை பரப்பி வருவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து திமுக மீது மாரிதாஸ் என்பவர் சமூகவலைத்தளங்களில் அவதூறு பரப்புவதாக திமுக தலைமைநிலையச் செயலர் ஆர்.எஸ்.பாரதி காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“மாரிதாஸ் என்பவர் தன் யூடியூப் சேனல் மூலம் தொடர் கருத்துகளை வெளியிட்டு வருகிறார். ஆகஸ்ட் 18, 2019 அன்று வெளியிட்ட வீடியோவில் ‘திமுக தடைசெய்யப்பட வேண்டுமா?’என்ற தலைப்பில் கூறிய கருத்துகள் அடிப்படை ஆதாரமற்றவை தவறானவை மக்களிடத்தில் திமுக பற்றி அவதூறு பரப்பும் நோக்கத்துடன் கூறப்படுபவை.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கும் விதமாக அரசியல் சட்டப்பிரிவு 370-ல் திருத்தம் கொண்டு வரப்பட்ட விவகாரத்தின் பின்னணியில் மாரிதாஸ் இத்தகைய கருத்துகளை வெளியிட்டு வருகிறார். தொலைக்காட்சியில் அவர் தோன்றும் விதமும் பேசும் விதமும் உலக அரசியலை புரிந்து கொண்டு விட்டதான தோரணையில் அமைந்துள்ளது.

ஆனால் மாரிதாஸின் நோக்கம் சமூக ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தை குலைப்பதாகவும் அமைந்துள்ளது. சமீபமாக திமுக வெளியிட்ட கொள்கை அறிக்கைகளை பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் சிறுபான்மையினருக்கு எதிராகவும் பயன்படுத்துகிறார்.

ஆகஸ்ட் 18ம் தேதி மாரிதாஸ் வீடியோவில் கூறிய 3 கூற்றுகள் இதுதான்:

1. 370ம் சட்டப்பிரிவு நீக்கப்பட்டது குறித்த திமுகவின் நிலைப்பாடு ஹிஸ்புதின், லஷ்கர் போன்ற தீவிரவாத இயக்கங்களுக்கு ஆதரவாக இருக்கின்றன.

2. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் குற்றவாளிகளின் தண்டனைக் காலத்தை குறைத்தது, தீவிரவாதிகளுக்கு ஆதரவளிக்கிறது.

3. திமுக பாகிஸ்தானிடமிருந்து பணம் பெற்றதா அல்லது அறிக்கைகளை வெளியிட தீவிரவாதக் குழுக்களுடன் புரிதல் மேற்கொண்டுள்ளதா?

மாரிதாஸின் இத்தகைய கூற்றுக்கள் வெறும் வதந்திகள், தவறான கூற்றுக்கள் வேண்டுமென்றே சமூகவலைத்தளவாசிகளிடம் மாரிதாஸ் அவதூறு பரப்புகிறார்.

காஷ்மீர் விவகாரத்தைப் பொறுத்தவரை 370-ம் பிரிவு நீக்கம் ஜனநாயக விரோதமானது, அரசியல்சாசனத்துக்கு விரோதமானது சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் காஷ்மீர் மக்களின் கருத்துகளைக் கேட்டறிய வேண்டும், காஷ்மீர் முஸ்லிம் பெரும்பான்மை மாநிலம் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை ஆகவே காஷ்மீர் மக்களுக்கு ஜனநாயக ரீதியான உரிமைகள் அளிக்கப்பட வேண்டும் என்ற திமுகவின் நிலைப்பாட்டை வேண்டுமென்றே மாரிதாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவு நிலைப்பாடு என்று திரிக்கிறார்.

இதைச் செய்யும் போதே காஷ்மீர் முஸ்லிம் மக்களை தீவிரவாதிகள் என்று சித்தரித்து ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக தவறான பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஆகவே மாரிதாஸ் மீது இரு சமூகங்கள் இடையே மோதலை உருவாக்க முயலுதல் பிரிவு 505(2), சமூக வலைதளங்களில் ஆட்சேபகரமான, மோதலைத்தூண்டும் கருத்துக்களை பகிர்ந்ததால் தகவல் தொழில் நுட்பச்சட்டம் 2000-ன் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக புகாரில் தெரிவிக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in