Published : 26 Aug 2019 05:16 PM
Last Updated : 26 Aug 2019 05:16 PM

இலங்கை வழியாக தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலா?- இலங்கை கடற்படை மறுப்பு 

ராமேசுவரம்,

இலங்கை வழியாக தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுவியதாக வெளியான தகவலுக்கு இலங்கை கடற்படை மறுப்பு தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி விழாவை சீர் குலைக்கவும், தாக்குதல் சம்பவங்கள் நடத்தவும் தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் நுழைந்துள்ளதாக உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது.

தீவிரவாதிகளில் 5 பேர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்றும், 6 பேரும் இலங்கையிலிருந்து கடல் வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து முகாமிட்டுள்ளதாக மத்திய உளவுப் பிரிவினர் மாநில காவல்துறையை எச்சரித்தனர்.

அந்த தீவிரவாதிகள் லஷ்கர் இ தொய்பா அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்பட்டது.

தொடர்ந்து தமிழக காவல்துறை மூலம் அனைத்து மாவட்ட காவல் துறையும் உஷார் படுத்தப்பட்டு கடந்த வெள்ளி, சனி ஆகிய இரண்டு தினங்கள் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டன.

மேலும் ராமேசுவரம் அருகே இந்திய-இலங்கை சர்வதேச கடல் வழி பாதுகாப்பை அதிகரித்து மண்டபம் கடலோர காவற்படையினர் ராமேசுவரம், தனுஷ்கோடி கடலோரப் பகுதிகளில் ஹோவர்கிராப்ட் கப்பல்கள் மூலம் தீவிரப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இது குறித்து இலங்கை கடற்படையின் செய்தி தொடர்பாளர் இசுறு சூரிய பண்டார, "இலங்கை கடற்படையினர் 24 மணி நேரமும் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறோம். தீவிரவாதிகள் இலங்கையில் இருந்து கடல் வழியாக இந்தியாவிற்குள் நுழைந்திருக்க வாய்ப்பில்லை. இலங்கையிலிருந்து தீவிரவாதிகள் இந்தியாவிற்கு ஊடுருவி உள்ளது தொடர்பான தகவலை ஏற்றுக் கொள்ள முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.

- எஸ். முஹம்மது ராஃபி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x