

திருப்போரூர்
காஞ்சிபுரத்தில் மர்மப்பொருள் வெடித்து 2 பேர் பலியாகினர். மேலும் 3 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் மேலும் ஒரு வெடிகுண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தை சேர்ந்தவர் திலீபன் ராகவன்(25). இவர் தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக, அதே பகுதியைச் சேர்ந்த ஜெயராமன், யுவராஜ், திருமால் மற்றும் கூவத்தூரைச் சேர்ந்த சூர்யா ஆகிய நண்பர்களுடன், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை கங்கையம்மன் கோயில் பின்னால் ஒன்றுகூடியுள்ளனர்.
மேலும், கேக் வெட்டிப் பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளனர். அப்போது, குளக்கரையில் மர்மப்பொருள் ஒன்று கிடந்ததை அவர்கள் பார்த்துள்ளனர். அது என்ன பொருள் என்ன என்று ஆராய்ந்த அவர்கள் கல்லை வைத்து அதை உடைத்துப் பிரிக்க முயன்றபோது, பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதாகத் தெரிகிறது. இதில் அதில் உள்ள துகள்கள் சிதறி உடலை துளைத்ததால், ஆறு இளைஞர்களும் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
இருவர் பலி
பலத்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்த கிராம மக்கள் அப்பகுதிக்கு ஓடி வந்தனர். பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர்களை மீட்டு, வாகனம் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
தகவல் அறிந்த மானாம்பதி மற்றும் திருப்போரூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். வெடித்து சிதறிய மர்மப் பொருள் என்ன, இங்கே எப்படி வந்தது என மாமல்லபுரம் ஏஎஸ்பி. பத்ரிநாத் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சூர்யா என்கிற இளைஞர் உயிரிழந்தார்.
இந்நிலையில், செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திலீபன் ராகவன்(25) சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். மேலும், காயமடைந்த மூன்று பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயராமன் என்பவர் மட்டும் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால், வெடிபொருள் வெடித்த சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.
மேலும், சம்பவ இடத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் நடத்திய சோதனையில் ராக்கெட் லாஞ்சர் வகையைச் சேர்ந்த மற்றொரு வெடிகுண்டு ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், சென்னையைச் சேர்ந்த வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் வடக்கு மண்டல ஐஜி.நாகராஜ், டிஐஜி.தேன்மொழி ஆகியோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். மேலும், வெடித்து சிதறிய வெடிகுண்டின் பாகங்களை சேகரித்து நிபுணர்கள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பயிற்சி மையத்தின் வெடிபொருட்கள்
இதுகுறித்து, கிராம மக்கள் சிலர் கூறும்போது, ''அனுமந்தபுரம் பகுதியில் உயர் காவல் அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பயிற்சின்போது பயன்படுத்தப்படும் கையெறி குண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள் உள்ளிட்ட சில வெடி பொருட்கள், வெடிக்காமல் வனப்பகுதியில் விழும் எனத் தெரிகிறது.
இதனைப் பயற்சி மையத்தை சேர்ந்த போலீஸார் அவ்வப்போது தேடி சேகரித்து செல்வர். சில நேரங்களில் குடியிருப்புகளுக்கு அருகிலும் பயிற்சியில் பயன்படுத்தப்பட்ட வெடி பொருட்கள் விழுந்துள்ளன. இவ்வாறு கிடைத்த வெடி பொருள் ஒன்றை மானாம்பதியைச் சேர்ந்த இளைஞர்கள் தவறுதலாக இங்கு கொண்டு வந்திருக்கலாம். எனினும், போலீஸார் விசாரணையின் முடிவில் உண்மை நிலை தெரியவரும்'' என்று தெரிவித்துள்ளனர்.