Published : 28 Mar 2014 09:10 AM
Last Updated : 28 Mar 2014 09:10 AM

புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து: ஜெயலலிதா உறுதி; ரங்கசாமி மீது கடும் தாக்கு

புதுச்சேரியில் வியாழக்கிழமை நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, புதுச்சேரிக்கு தனி மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும் என உறுதியளித்துள்ளார்.

புதுச்சேரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ஓமலிங்கத்தை ஆதரித்து ஜெய லலிதா பேசியதாவது: கடந்த 2011 புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக மற்றும் என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை மகத்தான வெற்றி பெறச் செய்தீர்கள். என்ஆர்.காங்கிரஸ் கட்சி தனி பெரும்பான்மை பெறவில்லை. அதிமுகவைப் புறக்கணித்துவிட்டு சுயேச்சை ஆதரவுடன் ஆட்சிய மைத்தார் ரங்கசாமி. அவர் அதிமுகவிற்கு மட்டும் துரோகம் இழைக்கவில்லை, உங்களுக்கும் துரோகம் இழைத்துவிட்டார்.

மீனவர்களுக்கு உதவவில்லை

தமிழகத்தில் மீனவர்கள் சிறைபிடித்து செல்லப்படும்போது நான் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டேன். தமிழக மீனவர் கள் விடுதலையாகும்போது காரைக் கால் மீனவர்களும் எனது முயற்சி யால் விடுதலையாகி வருகின்றனர். மீனவர்களை சிறைபிடிக்கும் இலங்கை அரசுக்கு எதிராக என்ஆர்.காங்கிரஸ் குரல் கொடுத்துள்ளதா?

பலவீனமான முதல்வர்

புதுச்சேரி மக்கள் பலவீனமான, செயலிழந்த முதல்வரைப் பெற்றுள்ளனர். வளர்ச்சியில் பின்னோக்கி செல்லும் மாநிலமாக புதுச்சேரி உள்ளது.

மத்திய அரசின் மக்கள் விரோத திட்டத்திற்கு ஆதரவாக, வாய்மூடி மவுனமாக இருப்பவர் ரங்கசாமி. ஜிப்மரில் 5 ஆண்டுகளுக்கு முன்பு இலவச சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது வருமான உச்சவரம்பை ஜிப்மர் நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. இதனால் ஏழைமக்கள் அவதிப்படுகின்றனர்.

சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு புகுத்தப்பட்டதற்கு என்.ஆர்.காங்கிரஸ் அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதற்கு திமுக ஆதரவு அளித்தது.

புதுச்சேரியை சேர்ந்த நாராயணசாமி மத்திய அமைச்சராக இருந்தும் தொழில் வளர்ச்சியில் புதுச்சேரி எந்த முன்னேற்றமும் காணவில்லை.

ஒரிசாவில் நிலக்கரி எடுக்க அனுமதி வழங்கியதில் நியாயமாக செயல்பட்டிருந்தால் புதுச்சேரி வளர்ச்சி பெற்றிருக்கும்.

மாநில அந்தஸ்து கோரிக்கை

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என 1998-ல் பிரதமரை நான் வலியுறுத்தினேன். இதையடுத்து, தனி மாநில அந்தஸ்து வழங்கப்படும் என பிரதமர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார். ஆனால் பின்னர் வந்த ஆட்சி மாற்றத்தால் அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. மத்தி யில் அதிமுக அங்கம் வகிக்கும் ஆட்சி அமைந்தால், புதுச்சேரியில் அனைத்து மக்களுக்கும் பாதிப்பில்லாத வகையில் தனி மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும் என உறுதியுடன் தெரிவிக்கிறேன்.

புதுவையில் அனைத்து பிராந்தியமும் சம வளர்ச்சி பெற, ரூ.5 ஆயிரம் கோடி மத்திய கடனை ரத்து செய்ய, மத்திய வரிவருவாயை புதுச்சேரிக்கு தனியாக பிரித்து வழங்க, நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்க்க அதிமுக மத்தியில் அங்கம் வகிக்க வேண்டும். அப்படி ஆட்சி அமைந்தால் நாட்டின் தனிநபர் வருமான உச்சவரம்பு ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படும் என்று ஜெயலலிதா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x