Published : 26 Aug 2019 01:09 PM
Last Updated : 26 Aug 2019 01:09 PM

திமுக தொடர்ந்த அவதூறு வழக்கின் தீர்ப்பு:  வைகோ ஆஜராகாததால் ஒத்தி வைப்பு

மதிமுக-வை உடைக்க கருணாநிதி முயற்சிக்கிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 2006-ம் ஆண்டு பேசியது தொடர்பாக அப்போது திமுக தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பளிக்கும் நேரத்தில், வழக்கில் வைகோ ஆஜராகாததால், தீர்ப்பை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு சிறப்பு அமர்வு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கடந்த 2006-ம் ஆண்டு தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி மதிமுகவை உடைக்க முயற்சிப்பதாக அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு வைகோ கடிதம் எழுதினார். அதை தொடர்ந்து அப்போதைய முதல்வர் சார்பில் வைகோவுக்கு எதிராக அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த அவதூறு வழக்கிலிருந்து வைகோவை விடுவிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், வழக்கின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள எம்எல்ஏ-க்கள் எம்பி-க்கள் மீதான வழக்கை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி கருணாநிதி முன்னிலையில் நடைபெற்று வந்தது.

குற்றச்சாட்டு பதிவு, சாட்சிகள் விசாரணை, சாட்சிகளிடம் குறுக்கு விசாரணை என அனைத்து நடைமுறைகளும் நிறைவடைந்து, வழக்கின் மீதான தீர்ப்பை இன்று வழங்குவதாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது , வைகோ ஆஜராகவில்லை. அப்போது வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவில், வைகோ உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக இன்று ஆஜராக வில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

எப்போது டிஸ்சார்ஜ் ஆவார் என்பது குறித்து சனிக்கிழமைதான் தெரியும் என்பதால் வழக்கை செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்திவைக்கவும் கோரிக்கை வைத்தனர். அப்போது நீதிபதி, தீர்ப்பின்போது குற்றம்சாட்டப்பட்டவர் என்ற அடிப்படையில் வைகோ கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என்பதால் தீர்ப்பு இன்று வழங்க இயலாது எனக் தெரிவித்தார்.

மேலும் தீர்ப்பை நீண்ட நாட்களுக்கு ஒத்திவைக்க முடியாது என்பதால், வழக்கின் தீர்ப்பை ஆகஸ்ட் 30-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? - ரம்யா பாண்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x