

தருமபுரி / சேலம்
ஒகேனக்கல்லில் 17 நாட்களுக்கு பின்னர் நேற்று பரிசல் இயக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. வெள்ளப் பெருக்கால் அருவி பகுதியில் ஏற்பட்ட சேதங்கள் சீரமைக்கப்படாததால், பிரதான அருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கேரள, கர்நாடக மாநிலங்களில் பெய்த கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி, கேஆர்எஸ் ஆகிய அணைகள் நிரம்பின. இதையடுத்து, உபரிநீர் காவிரியாற்றில் திறந்து விடப்பட்டன. இதனால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் பெருமளவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நீர்வரத்து அதிகரித்த நிலையில், கடந்த 8-ம் தேதி முதல் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்கத்துக்கு மாவட்ட நிர்வாகம் தற்காலிக தடை விதித்தது. கடந்த 9-ம் தேதி இரவில் நீர்வரத்து விநாடிக்கு 25 ஆயிரம் கனஅடியான நிலையில், பிரதான அருவி, ஆறு உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
கடந்த 12-ம் தேதி பிற்பகலில் ஒகேனக்கல்லுக்கு விநாடிக்கு அதிகபட்சமாக 2.80 லட்சம் கனஅடி தண்ணீர் வெள்ளமாக பெருக்கெடுத்து வந்தது. அதன் பின்னர் அடுத்தடுத்த நாட்களில், கேரள மற்றும் கர்நாடக மாநில பகுதிகளில் மழை குறையத் தொடங்கியது. இதனால், கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரின் அளவும் படிப்படியாக குறைந்தது. இருப்பினும், பரிசல் பயணத்துக்கும், அருவி உள்ளிட்ட பகுதிகளில் குளிக்கவும் தடை நீடித்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் (24-ம் தேதி) விநாடிக்கு 13 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 12 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதையடுத்து, அதிகாரிகள் ஒகேனக்கல்லில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் கோத்திக்கல் பாறை முதல் மணல் திட்டு வரை பரிசல் இயக்கத்துக்கு அனுமதி அளித்தனர். இதனால், நேற்று ஒகேனக்கல் வந்த சுற்றுலா பயணிகள் பரிசலில் பயணம் செய்து மகிழ்ந்தனர். வெள்ளத்தால் சேதமான அருவி பகுதி சீரமைக்கப்படாத நிலையில், பிரதான அருவியில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
மேட்டூர் அணை நிலவரம்
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 17 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 11 ஆயிரம் கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடியும், கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்வரத்துக்கு இணையாக அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ள தால், அணை நீர்மட்டம் கடந்த இரு நாட்களாக 117 அடியாக உள்ளது. நேற்று காலை நீர்மட்டம் 117.30 அடியாகவும், நீர் இருப்பு 89.22 டிஎம்சி-யாகவும் இருந்தது.
அந்த போட்டோஷூட்டுக்கு என்ன காரணம்? ரம்யா பாண்டியன்