

சென்னை
சென்னையில் இன்று நடைபெற்ற திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டதில் இளைஞர் அணி உறுப்பினர்களின் வயது வரம்பை 35 மாற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் இன்று நடந்தது. இதில் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
மாநிலம் முழுவதும் இருந்து மாநில, மாநகர, மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்குவதற்கு முன்பு மேடையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்துக்கு உதயநிதி ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கூட்டத்தில் மார்ச் 1-ம் தேதி இளைஞர்களை ஊக்குவிக்க மாவட்ட - மாநில அளவில் விளையாட்டுப் போட்டிகளை இளைஞர் அணியின் சார்பில் நடத்துவது, செப்டம்பர் 14-ந்தேதி முதல் நவம்பர் 14-ந்தேதிக்குள் ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு 10 ஆயிரம் பேருக்கும் குறையாமல் 30 லட்சம் இளைஞர்களை உறுப்பினர்களாக சேர்ப்பது என்றும் விதியை மாற்றி, 15 முதல் 35 வயதுள்ள இளைஞர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கலாம் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
லட்சக்கணக்கான தமிழ் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி இருக்கும் நிலையிலும், இன்னும் பல லட்சக்கணக்கானோர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் நிலையிலும், தமிழகத்தில் அஞ்சல், ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவன வேலை வாய்ப்புகளை வட மாநிலத்தவர்களுக்கு வாரி வழங்கும் துரோகத்தை மத்திய அரசு செய்து வருவதாகவும், இதற்கு தமிழக அரசு துணை போவதாகவும் கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.