

கோவை
இலங்கை மற்றும் பாகிஸ்தானை சேர்ந்த 6 தீவிரவாதிகள் கோவையில் ஊடுருவியுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து போலீஸார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தின் முக்கிய இடங்களில் வாகன தணிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
6 தீவிரவாதிகள் மற்றும் அவர்களுக்கு உதவியதாக கூறப்படும் கேரளாவை சேர்ந்த அப்துல்காதர் என்பவரை குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், மாநில சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் மற்றும் கோவை மாநகர போலீஸார் , உக்கடம் பொன்விழா நகரை சேர்ந்த சித்திக், சென்னையை சேர்ந்த ஜாகீர் ஆகிய இரண்டு பேரை சந்தேகத்தின் பேரில் நேற்று பிடித்துள்ளனர்.
இவர்களை கோவை காருண்யா நகர் காவல் நிலையத்தில் வைத்து போலீஸார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர். மாநில சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் மற்றும் கோவை சரக டிஐஜி கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் திருச்சூரை சேர்ந்த அப்துல்காதர் என்பவரிடம் தொடர்ந்து, தொலைபேசி மூலம் பேசி வந்ததாகவும், பல்வேறு தகவல்களை பரிமாறி வந்ததாகவும் கூறப்படுகிறது. இவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
கேரளாவை சேர்ந்த சித்திக் சென்னையில் பணியாற்றுகிறார். அவர் நேற்று கோவை வந்த போது போலீஸார் பிடித்துள்ளனர். இவர் அப்துல்காதருடன் தொடர்பில் இருப்பவர். கோவையை சேர்ந்த ஜாகிரும் சித்திக்கிடம் தொடர்பில் இருந்ததால் பிடித்துள்ளனர். இருவரிடமும் விசாரணை தொடர்கிறது.