Published : 25 Aug 2019 10:12 AM
Last Updated : 25 Aug 2019 10:12 AM

தானியங்கி தொட்டில் ஆட்டும் கருவி வடிவமைப்பு: கொத்தமங்கலம் இளைஞருக்கு குவியும் பாராட்டு

கே.சுரேஷ்

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தில் தானியங்கி தொட்டில் ஆட்டும் கருவியை வடிவமைத்துள்ள எம்.வீரமணிக்கு தாய்மார்களின் பாராட்டு குவிகிறது.

புதுக்கோட்டை மாவட்டம் கொத்தமங்கலத்தைச் சேர்ந்தவர் எம்.வீரமணி(38). விவசாயியான இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. இரு குழந்தைகளையும் பராமரிப்பதற்கு மிகவும் சிரமத்தைச் சந்தித்து வந்தனர். அதில் ஒன்று, பெரும்பாலான நேரங்களில் ஒருவரே ஒரே நேரத்தில் இரு குழந்தைகளையும் இருவேறு தொட்டில்களில் படுக்க வைத்து ஆட்ட வேண்டும் என்பது.

இது ஒரு நெருக்கடியான சூழல் என்பதால், இதை எளிதாக்கும் வகையில் ஏதாவது செய்தால் என்ன எனச் சிந்தித்து தனது எண்ணத்தில் விளைந்த கருத்து ஒன்றுக்கு செயல் வடிவம் கொடுத்தார் வீரமணி. கார் உள்ளிட்ட வாகனங்களில் முன்பக்க கண்ணாடியைத் துடைக்கும் வைப்பரை இயக்கும் மோட்டாரைக் கொண்டு தானியங்கி தொட்டில் ஆட்டும் கருவியை வடிவமைத்தார் வீரமணி. எளிய தொழில்நுட்பம் என்பதால் இவரது நண்பர்கள் பலரும் இந்தக் கருவியை பயன்படுத்தி வருகின்றனர். இவரது வடிவமைப்பு தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து வீரமணி, ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது: இரு குழந்தைகளுக்கும் இரு தொட்டில் கட்டி ஒருவரே ஆட்டவேண்டியிருந்தது. அதற்காக இரு தொட்டில்களின் மையத்தில் நின்று தங்களின் இரு கைகளால் இரு தொட்டில்களையும் ஆட்டிக்கொண்டே இருப்போம். இரு தொட்டில்களும் அருகருகே இருக்கும் என்பதால் ஒரு குழந்தை அழுதால் அடுத்த குழந்தையும் விழித்துக்கொண்டு அழத் தொடங்கும். இதனால் பல்வேறு சிரமங்களையும் எதிர்கொண்டோம். சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் புதுப்புது கருவிகள் வந்துவிட்ட நிலையில் தொட்டிலை ஆட்டுவதற்கு எளிதாக ஏதாவது கருவி கிடைக்குமா? என்று பல்வேறு இடங்களிலும் தேடினேன். ஆன்லைனில் கூடக் கிடைக்கவில்லை.

ஒருமுறை குழந்தைகளுடன் நானும், மனைவியும் பேருந்தில் பயணித்தோம். அப்போது, பேருந்தின் முன்பக்க கண்ணாடி மீது படிந்த மழைநீரைத் துடைத்த வைப்பர் முன்னும், பின்னும் சென்று வந்ததைக் கவனித்தேன். வைப்பரின் செயல்பாடும், தொட்டிலை ஆட்டும் விதமும் ஒரே மாதிரிதானே உள்ளது என யோசித்த நான், இந்த மோட்டாரை கொண்டு தானியங்கி தொட்டில் ஆட்டும் கருவியை வடிவமைப்பது குறித்து சிந்தித்து வந்தேன்.

பின்னர் வைப்பர் மோட்டாரை வாங்கி வந்து, அதை வீட்டினுள் தொட்டில் கட்டும் இடத்தில் பொருத்தினேன். மோட்டாரையும் தொட்டிலையும் இணைக்கும் வகையில் சில வளையங்களைப் பொருத்தினேன். நான் நினைத்தது போல தொட்டிலை எளிதாக ஆட்ட முடிந்தது. இதன் மூலம் தேவைக்கு ஏற்ப வேகமாகவும், மெதுவாகவும் தொட்டிலை ஆட்டச் செய்யலாம். மேலும், 12 வோல்ட் என்ற குறைந்த அளவு மின்சாரத்திலேயே மோட்டார் இயங்கும் என்பதால் மின்சாரம் அதிகம் விரயமாகி மின்கட்டணம் பெருமளவு உயருமோ என்று கவலைப்படத் தேவையில்லை.

என் வீட்டில் பொருத்தப்பட்ட இந்தக் கருவி எங்களுக்கு நல்ல பலனையும், குடும்பத்தினரிடையே நிம்மதியையும் கொடுத்துள்ளது. அதன் பிறகு உள்ளூரில் பலருக்கும் இதுபோன்ற கருவியை வடிவமைத்துக் கொடுத்தேன். இந்தக் கருவி தாய்மார்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்றார்.

தங்களது வீட்டில் மழைநீர் சேகரிப்பு, மரக்கன்றுகள் பராமரிப்பு என நீர் மேலாண்மையில் முன்மாதிரி திட்டங்களைச் செயல்படுத்தி வரும் வீரமணி- வனிதா தம்பதியரை புதுக்கோட்டையில் அண்மையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.மழைநீர் சேகரிப்பு, மரக்கன்றுகள் பராமரிப்பு என நீர் மேலாண்மையில் முன்மாதிரி திட்டங்களைச் செயல்படுத்தி வரும் வீரமணி- வனிதா தம்பதியரை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி பாராட்டினார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x