Published : 25 Aug 2019 10:06 AM
Last Updated : 25 Aug 2019 10:06 AM

சிறுதானிய மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் இளைஞர்கள் ஆர்வம் : ஆரோக்கியம் காக்கப்படுவதால் சந்தையில் வரவேற்பு

வி.சீனிவாசன்

சேலம்

வீரிய விதை உற்பத்தி பொருட்களை புறம்தள்ளி, சிறுதானிய உணவு வகைகளினால் ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அப்பொருட்களை வாங்கி பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சோளம், கேழ்வரகு, கம்பு, சாமை, தினை, வரகு, பனிவரகு உள்ளிட்ட பொருட்களின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்துள்ளது.

சிறுதானிய பொருட்களுக்கு குறைந்த நீர்த்தேவை, பூச்சி நோய் தாக்குதலை எதிர்கொள்ளும் திறன், வறட்சியை தாங்கும் தன்மை ஆகியவற்றால், சிறுதானிய பொருட்கள் சேலம் மாவட்டத்தில் பரவலாக பயிரிடப்பட்டு, அதன் மூலம் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பில் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக இளைஞர் மற்றும் மகளிர் குழுவினர் சிறுதானிய உணவுப் பொருட்களை மதிப்புக்கூட்டப்பட்ட பொருளாக தயாரித்து விற்பனை செய்வதில் ஈடுபட்டு வருகின்றனர்.

சத்து மாவு...திண்பண்டங்கள்

சிறுதானிய பொருட்களில் இருந்து சத்துமாவு, தோசை மாவு, லட்டு, குழந்தைகளுக்கான திண்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை தயாரித்து கடைகள், ஷாப்பிங் மால், வணிக நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் வசிஷ்டா உழவர்கள் உற்பத்தியாளர்கள், ஏற்காடு சிறுதானிய உற்பத்தியாளர்கள், கல்ராயன் சிறுதானிய உற்பத்தியாளர்கள் என பல்வேறு குழுவினர் மூலம் சிறுதானிய பொருட்களில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

ஆரோக்கியத்துக்கு முதலிடமும், விலை மலிவு என்பதால், இதுமக்களிடையே அமோக வரவேற்பு பெற்றுள்ளதால், கிராம பொருளாதாரம் சார்ந்த உயர்வுக்கும் வழி வகுத்துள்ளது.

இதுகுறித்து சேலம் சந்தியூர் வேளாண் ஆராய்ச்சி நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராம் கூறியதாவது:

சிறுதானியத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வது, வெற்றிகரமான தொழிலாக உள்ளது. கிராமப்புற இளைஞர்களும், மகளிர் குழுவினர் ஆர்வமுடன் இப்பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டு சந்தைப்படுத்தி வருகின்றனர். சிறுதானியத்தை தானியமாக விற்பதன் மூலம் கிலோ ரூ.25 விலையில் விற்பனை செய்யப்பட்டால், மதிப்புக் கூட்டப்பட்ட பொருளாக விற்பனை செய்யும் போது, அப்பொருள் கிலோ ரூ.60 விலையிலும், பிஸ்கட் மற்றும் திண்பண்டங்கள் ரூ.150 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பயிற்சிக்கு அழைப்பு

சோளத்தின் மூலம் சோள மாவு, அடை, சோள தோசை மாவு, சோளம் மால்ட், சோளம முறுக்கு, ராகி அல்வா, ராகி தோசை, ராசி அடை, ராகி சேமியா, வரகு பிரியாணி, வரகு மாவு, வரகு மால்ட், வரகு முறுக்கு, கம்பு பிஸ்கட், கம்பு லட்டு, கம்பு பொரி, சாமை பனியாரம், சாமை பொங்கல், தினை கலவை சாதம், தினை அடை என சிறுதானியத்தின் மூலம் நூற்றுக்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு, அனைத்து வணிக நிறுவனங்களிலும், பெரிய ஷாப்பிங் மால்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சிறுதானிய பொருட்கள் மூலம் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து விற்பனை செய்து, தொழில் ரீதியாக முன்னேற்றம் காண விரும்புபவர்களுக்கு சேலம், சந்தியூர், வேளாண்மை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பயிற்சி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்திடவும், படித்த இளைஞர்களுக்கான சுய தொழிலாக வளர்ந்து வரும் சிறுதானியம் மூலம் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் விற்பனை சேலம் மாவட்டத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x