

திருப்போரூர்
திருப்போரூர் வட்டம் கானாத்தூர் அருகே கரிக்காட்டுக்குப்பம் ஆற்றுப் பகுதியில் பல ஆயிரக் கணக்கான மீன்கள் செத்து மிதக்கின்றன. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன், தொற்று நோய் பரவுவதற்கான அபாயம் இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ள னர்.
கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் கானாத்தூர் அருகே உள்ள கரிக்காட்டுக்குப்பம் பகுதி யில் கடற்கரையை ஒட்டி அமைந் துள்ள ஆற்றில் எப்போதும் மீன்கள் அதிக அளவு இருக்கும். மீனவருக்கு முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் இந்த ஆற்றில் கடந்த 2 நாட்களாக திடீரென மீன்கள் எல்லாம் செத்து மிதந்தன. இதனால் இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. காகம் உள்ளிட்ட பறவை கள் செத்து மிதக்கும் மீன்களை கொத்திச் சென்று பல்வேறு குடி யிருப்பு பகுதிகளிலும் போட்டுச் செல்கின்றன. இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள் ளது.
இதுகுறித்து இப்பகுதி மீன வர்களிடம் கேட்டபோது, “இந்த ஆற்றை சுற்றிலும் பல்வேறு அடுக்கு மாடி குடியிருப்புகள், தனியார் நிறு வனங்கள் உள்ளன. அங்கிருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த ஆற்று நீரில் கலப்பதனால்தான் மீன்கள் செத்து மிதந்து துர்நாற்றம் வீசுகிறது.
இதனால் மீனவர்களின் வாழ் வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. உடனடியாக செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த வேண் டும், மேலும், மேற்குறிப்பிட்ட பகுதி களில் இருந்து கழிவுநீர் வெளியாகி ஆற்றில் கலப்பதை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இதுகுறித்து மீன்வளத்துறை உதவி இயக்குநர் மோகனிடம் கேட்ட போது ‘ஆற்றில் கழிவுநீர் கலப்பதாக எங்களுக்கு தகவல் இல்லை. இனி மேல்தான் ஆய்வு செய்ய வேண்டும். கடலுடன் ஆறு கலக்கும் முகத்துவாரத் தில் அடைப்பு உள்ளதால் தண்ணீர் சரியாக ஓடாமல் தேங்கியுள்ளது. இதுபோல் தேங்கியுள்ள தண்ணீரில் காலநிலைக்கு ஏற்ப ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். நீரில் ஆக்ஸிஜன் குறைந்தால் மடவை மீன்கள் உடனடியாக பாதிக்கப்படும். அந்த வகை மீன்களே தற்போது இறந்துள்ளன. அவற்றை அப்புறப் படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.