Published : 24 Aug 2019 07:47 PM
Last Updated : 24 Aug 2019 07:47 PM

நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு கண்கெட்டப்பின் சூரிய நமஸ்காரம் போன்றது : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சனம் 

சென்னை

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மூலம் சில நடவடிக்கைகளை மத்திய அரசு நேற்று அறிவித்திருக்கிறது. இது கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைப் போல நெருக்கடி உச்சத்தை அடைந்திருக்கிற சூழ்நிலையில் இந்த நடவடிக்கைகள் உரிய பலனை தருமா என்பது கேள்விக்குறியே என மார்க்சிஸ்ட் கட்சி விமர்சித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் இந்திய பொருளாதாரம் தொழில், வர்த்தகம், வாகன உற்பத்தி, இன்ஜினியரிங், துணி ஆலைகள், சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட பல துறைகளும் பெரும் பாதிப்புக்குள்ளாகி மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடந்த பல ஆண்டுகளாக மோடி அரசு கடைபிடித்து வரும் மோசமான பொருளாதாரக் கொள்கையின் காரணமாக, நாட்டின் பொருளாதாரம் நாசமடைந்துள்ளது என்பதை பலமுறை பதிவு செய்துள்ளன.

குறிப்பாக, மோடி அரசு மேற்கொண்ட பண மதிப்பு நீக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரி உயர்வு, கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்குவது, மக்கள் நலத் திட்டங்கள் வெட்டிக் குறைப்பு போன்ற காரணங்களால் நாட்டில் வறுமையும், வேலையில்லா திண்டாட்டமும் தலை விரித்தாடுகிறது என்பதை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அழுத்தமாக சுட்டிக்காட்டி வந்துள்ளது.

விவசாய நெருக்கடியால், விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலைக்கு தள்ளப்படுவது தொடர்கதையாக வந்துள்ளது. இதை எதிர்த்து நாடுதழுவிய போராட்டங்களை நடத்திய பின்னரும், மோடி அரசு செவிமடுக்க மறுத்துவிட்டது.

பாஜக அரசின் நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நிதிநெருக்கடியில் இந்திய நாடு சிக்கியுள்ளது என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுகாறும் இந்தியா வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டுள்ளது, அடுத்த இலக்கு 5 டிரில்லியன் டாலர் சொல்லிக் கொண்டிருந்த மத்திய மோடி அரசு, பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்பதை பகிரங்கமாக ஏற்றுக் கொள்ள தவிர்த்தாலும், நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மூலம் சில நடவடிக்கைகளை நேற்று அறிவித்திருக்கிறது.

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதைப் போல நெருக்கடி உச்சத்தை அடைந்திருக்கிற சூழ்நிலையில் இந்த நடவடிக்கைகள் உரிய பலனை தருமா என்பது கேள்விக்குறியே.

மேலும், இந்த நடவடிக்கைகளும் பொருளாதார நெருக்கடியை காரணம் காட்டி தங்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்க வேண்டுமென்ற உள்நாட்டு, வெளிநாட்டு, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கும் தன்மையில் உள்ளனவே தவிர, நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் விவசாயத்துறை, சிறு வணிகம், சிறு-குறு நடுத்தர தொழில்கள் பாதுகாப்பு, வேலையின்மையை போக்குவது உள்ளிட்டு வறுமையில் வாடும் மக்களுக்கும் எந்த நிவாரணமும் அறிவிக்கப்படவில்லை.

அதேசமயம் ஜி.எஸ்.டி. வரி செலுத்திய நிறுவனங்களுக்கு அந்த தொகையை 30 நாட்களுக்கு திருப்பி வழங்குவது, சிறு-குறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் நடைமுறையை எளிதாக்குவது போன்ற ஒரு சில அறிவிப்புகளைத் தவிர, ஏனைய அனைத்து அறிவிப்புகளும் ஏற்கனவே சலுகைகளை அனுபவித்து வருகிற கார்ப்பரேட் நிறுவனங்களுக்கே சாதகமாக உள்ளன.

குறிப்பாக நாடு எதிர்கொள்ளும் தொடர் அந்நியச் செலவாணி நெருக்கடியின் விளைவாக, அந்நிய நிதிமூலதனத்தை சார்ந்துள்ள மத்திய அரசு, அந்நிய நிறுவன முதலீட்டாளர்களின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்று அவர்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரிகளை ரத்து செய்திருக்கிறது. இது எந்த அளவுக்கு இந்திய பொருளாதாரத்தின் இறையாண்மையை இந்த அரசு கைவிட்டு வருகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது.

மேலும் அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் நெருக்கடியைத் தீர்க்க உதவாது. வரும் காலங்களில் நெருக்கடி இன்னும் தீவிரமடையும். மேலும், பெரும் இந்திய மற்றும் பன்னாட்டுக் கம்பெனிகள் ஆகப் பெரிய செல்வந்தர்கள் ஆகியோர் முறையாக வரி செலுத்துவதை உறுதிப்படுத்தி, அரசு தனது வருமானத்தை உயர்த்தி, அதன் மூலம் மிகவும் அவசியமான பொதுத்துறை முதலீடுகளை கல்வி, சுகாதாரம், கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

இதற்கு நேர்மாறாக, பொதுத்துறை பங்குகளை மானாவாரியாக விற்று வரும் அரசின் கொள்கை கண்டிக்கத்தக்கது.

எனவே, மோடி அரசு விவசாயத்துறையை மீட்டெடுப்பது, பாசன மேம்பாட்டுத் திட்டங்களை உருவாக்கி நீர் மேலாண்மையை மேம்படுத்துவது, முழுமையான பயிர் இன்சூரன்ஸ் திட்டங்களை நிறைவேற்றுவது, விவசாயத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலையையும், வருமானத்தையும் உறுதி செய்வது, வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பது, அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களை பூர்த்தி செய்வது, அதிகமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சிறு-குறு, நடுத்தர தொழிற்சாலைகளுக்கு சந்தை உத்தரவாதம், கடன் வழங்குவது, ஜி.எஸ்.டி.யிலிருந்து விதிவிலக்கு அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்”.

இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x