Published : 24 Aug 2019 03:46 PM
Last Updated : 24 Aug 2019 03:46 PM

மோடியை துதிபாடி பிழைக்க நினைத்தால் காங்கிரஸிலிருந்து வெளியேறுங்கள்: ஜெய்ராம் ராமேஷுக்கு கே.எஸ்.அழகிரி அறிவுரை

சென்னை

ஜெய்ராம் ராமேஷ் போன்றவார்களின் சந்தர்ப்பவாதமும், சுயநலமும் மோடிக்கு ஆதரவான கருத்துக்கள் மூலம் அம்பலமாகியுள்ளது என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "2014 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மக்களவை தேர்தலில், பாஜக ஆட்சியின் சாதனைகளைச் சொல்லி வாக்குகளை பெறாமல் மதரீதியாக மக்களை திசை திருப்பி வாக்குகளை பெற்று ஆட்சி அமைத்தவர் நரேந்திர மோடி. ஆர்எஸ்எஸ் என்கிற நச்சு இயக்கத்தினால் இயக்கப்படுபவர் பிரதமராக பொறுப்பேற்றிருக்கிறார்.

1925 ஆம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் தொடங்கப்பட்டது முதல் அதனுடைய சித்தாந்தத்தை எதிர்த்து கருத்து மோதலை காங்கிரஸ் கட்சி நடத்தி வருகிறது. பாஜகவின் சித்தாந்தமும், காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தமும் அடிப்படையில் முற்றிலும் வேறுபட்டவை. வேற்றுமையில் ஒற்றுமை காண்பது காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தம்.

மக்களை மதரீதியாக பிளவுபடுத்துவது பாஜகவின் சித்தாந்தம். இத்தகைய சித்தாந்தத்தை நடைமுறைப்படுத்தி வரும் நரேந்திர மோடியை எதிர்ப்பது காங்கிரஸ் கட்சிக்கு பயன் தராது என்று அரசு அதிகாரிகளாக இருந்து, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து, மத்திய அமைச்சர்களாக பதவிகளை அனுபவித்த ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் கருத்து கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது.

கருத்துச் சுதந்திரத்தின் அடிப்படையில் இத்தகைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டுமென்று தோன்றியிருந்தால் சோனியா காந்தி, ராகுல்காந்தியிடம் தெரிவித்திருக்கலாம். பொதுவெளியில் இக்கருத்துக்களை சொல்வது போர்க்களத்தில் பாஜகவை எதிர்த்து போராடுகிற காங்கிரஸ் தொண்டர்களின் மன உறுதியை சீர்குலைத்துவிடும்.

காங்கிரஸ் கட்சியை நேரிடையாக தாக்குகிற பாஜகவின் செயலை விட, மோடியின் சிறு சிறு நடவடிக்கைகளை பாராட்டுவது என்பது காங்கிரசை பலகீனப்படுத்துகிற முயற்சியாகவே கருத முடியும். இதற்காகவா ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்களுக்கு சோனியா காந்தி பல பதவிகளை வழங்கி, அழகு பார்த்தார்? இவர்களது சந்தர்ப்பவாதமும், சுயநலமும் மோடிக்கு ஆதரவான கருத்துக்கள் மூலம் அம்பலமாகியிருக்கிறது.

ஜெய்ராம் ரமேஷ்: கோப்புப்படம்

நரேந்திர மோடி ஆட்சியில் பல்வேறு பொய் வழக்குகளை காங்கிரஸ் தலைவர்கள் சந்தித்து வருகிறார்கள். நேரு தொடங்கிய நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையை அபகரிப்பதற்கு சோனியா காந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மீது வழக்கு தொடுத்திருக்கிறார்கள். மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்ததற்காக முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

கொடிய அடக்குமுறையை காங்கிரஸ் கட்சி சந்தித்துக் கொண்டிருக்கும் போது, இத்தகைய விஷமத்தனமான கருத்துக்களை ஜெய்ராம் ரமேஷ் போன்றவர்கள் கூறுவது, அதை இன்னும் சிலர் ஆமோதிப்பது, இதைவிட காங்கிரஸ் கட்சிக்கு செய்கிற பச்சை துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.

இந்திரா காந்தி 1977 இல் பதவி விலகிய பிறகு, ஜனதா ஆட்சியால் வேட்டையாடப்பட்ட போது, அவரது ஆட்சியில் பதவி சுகத்தை அனுபவித்த அறிவுஜீவிகள் எத்தகைய துரோகத்தை செய்தார்கள் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

நரேந்திர மோடியைப் புகழ்வதற்கு பாஜகவில் நிறைய தலைவர்கள் இருக்கிறார்கள்.அந்த வேலையை இவர்கள் செய்வதற்கு ஏதோ ஒரு உள்நோக்கம் இருக்கிறது. நரேந்திர மோடியை துதிபாடி பிழைக்க வேண்டும் என்று நினைத்தால் இவர்கள் நாகரீகமாக உடனடியாக காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுவது நல்லது.

இத்தகைய குழப்பவாதிகளை காங்கிரஸ் தலைமை உடனடியாக அடையாளம் கண்டு விரைந்து உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும்", இவ்வாறு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x