Published : 24 Aug 2019 01:50 PM
Last Updated : 24 Aug 2019 01:50 PM

காமராஜர் அமைத்த மதுரை கோ.புதூர் சிட்கோ தொழிற்பேட்டை நினைவு நுழைவுவாயில் மாயம்: இடித்து அப்புறப்படுத்தியதால் பொதுமக்கள் அதிர்ச்சி

மதுரை

காமராஜர் காலத்தில் அமைக்கப்பட்ட சிட்கோ தொழிற்பேட்டை நுழைவு வாயில் நினைவு தூண் இடித்து அகற்றப்பட்டது பொதுமக்கள் மற்றும் சிட்கோ தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் அருகே கோ.புதூர் சிட்கோ தொழிற்பேட்டை 56 ஏக்கரில் அமைந்துள்ளது. இதில், 200-க்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தொழிற்சாலைகள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்.

இந்த தொழிற்பேட்டை, காமராஜர் ஆட்சி காலத்தில் 1960ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த சிட்கோ தொழிற்பேட்டை சாலைகள் மிக மோசமாக சிதிலமடைந்து காணப்பட்டன.

கற்கள் பெயர்ந்து, தொழிலாளர்கள் நடந்து வர முடியாமலும், வாகனங்களில் செல்ல முடியாமலும் அவதியடைந்தனர். தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் மோசமடைந்த சாலைகளை சீரமைக்க சிட்கோ நிர்வாகம் முயற்சி செய்யவில்லை.

இந்நிலையில் 13 ஆண்டிற்கு பிறகு தற்போது இந்த தொழிற்பேட்டைக்கு சாலைகள் அமைக்கும் பணி நடக்கிறது. காமராஜர் ஆட்சி காலத்தில் இந்த சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட்டதின் நினைவாக நுழைவு வாயில் தூண் பிரமாண்டமாக அமைக்கப்பட்டிருந்தது.

மதுரையில் இதுபோல் உலக தமிழ்ச்சங்க மாநாடு, மாநகராட்சி பொன்விழாக்களின் அடையாளமாகவும் நினைவாகவும் பல்வேறு இடங்களில் பழங்கால நினைவு நுழைவு வாயில் தூண்கள் உள்ளன.

இந்த நினைவு நுழைவுவாயில் தூண்கள், தற்போதும் மதுரையின் பழம்பெருமைகளை இந்த தலைமுறையினர் அறிந்து கொள்ள தெரிந்து கொள்ள உதவுகிறது.

அதனால், வாகனப்பெருக்கத்தால் சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட்டாலும், மதுரையில் உள்ள இந்த பழம்பெருமை வாயந்ந்த நுழைவு வாயில் தூண்கள் இடிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகிறது.

ஆனால், சிட்கோ தொழிற்பேட்டையில் காமராஜர் ஆட்சியில் கோ.புதூர் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்பட்டதை நினைவு கூறும் வகையில் அமைக்கப்பட்டிருந்த சிட்கோ நுழைவுவாயில் நினைவு தூண் தற்போது இருந்த இடம் தெரியாமல் மாயமாகியுள்ளது.

இந்த நினைவு தூணால் அப்பகுதியில் எந்த இடையூறும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படவில்லை. ஆனால், யாருக்கும் தெரியாமல் இந்த சிட்கோ நுழைவு வாயில் நினைவு தூண் இடித்து அகற்றப்பட்டது பொதுமக்கள் மத்தியிலும், சிட்கோ தொழிப்பேட்டை தொழிலாளர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x