

சென்னை
பாஜக மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அருண் ஜேட்லி உடல்நலக் குறைவு காரணமாக, எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 66. அவருடைய மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பன்வாரிலால் புரோஹித், தமிழக ஆளுநர்
சட்ட நிபுணராகவும், மூத்த அரசியல் தலைவராகவும் இருந்த அருண்ஜெட்லி, தன் ஆளுமைத்திறனால் என்றென்றும் நினைவுகூறப்படுவார். அவர் இந்திய மக்களின் சொத்து.
தமிழிசை சவுந்தரராஜன், தமிழக தலைவர், பாஜக
சொல்லொண்ணாத்துயரம் அடைந்தேன். கட்சிக்கும் ஆட்சிக்கும் நாட்டுக்கும் பேரிழப்பு. தன் அறிவாற்றலை நாடு பயன்பெற பயன்படுத்தியவர். எல்லோராலும் எளிதில் அணுகக்கூடிய தலைவர். தன் உடல்நிலை பாதித்தபோது அதை ட்வீட் செய்துவிட்டு அரசாங்க மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டார்.
ஹெச்.ராஜா, தேசிய செயலாளர், பாஜக
அருண் ஜெட்லியின் மரண செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைகிறேன். நிதி அமைச்சராக இருந்த பொழுது பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். தேசத்திற்கும் இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு. ஆ
வானதி சீனிவாசன், மாநில பொதுச் செயலாளார், பாஜக
அறிவார்ந்த, கடினமாக உழைக்கக்கூடிய, சிறந்த தேச பக்தரை நாடு இழந்துவிட்டது. இந்தியாவுக்கு பெரிய இழப்பு.
வைகோ, மாநிலங்களவை உறுப்பினர், மதிமுக
பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரும், மத்திய சட்டம், நிதி, செய்தி ஒலிபரப்பு ஆகிய துறைகளின் முன்னாள் அமைச்சருமான அருண்ஜெட்லி இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகிறேன்.
சட்ட வல்லுநர்; ஆங்கிலப் புலமை மிக்கவர்; நாடாளுமன்ற விவாதங்களில் முத்திரை பதித்தவர்; அமைச்சராகப் பொறுப்பு வகித்த காலங்களிலும், எளிதில் அணுகக் கூடியவராக இருந்தார். ஆளுமைத் திறம் மிக்கவர்; பிரச்சினைகளை அலசி ஆராய்ந்து, விரைவாக முடிவுகளை எடுக்கக்கூடியவர்; எனக்கு நல்ல நண்பர். அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், உற்றார் உறவினர்களுக்கு, மதிமுகவின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தயாநிதி மாறன், மக்களவை உறுப்பினர், திமுக
அருண் ஜெட்லியின் இறப்பு செய்தியை அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். இந்த நாட்டுக்கு அவர் அளித்த பங்களிப்புகள் என்றும் நினைவுகூறத்தக்கது. திருச்சி சிவா மற்றும் நான் டெல்லியில் திமுக தலைவர் ஸ்டாலின் சார்பாக நேரில் அஞ்சலி செலுத்துவோம்.
ராமதாஸ், நிறுவனர், பாமக
இந்தியாவின் தலைசிறந்த சட்ட வல்லுநர்களில் ஒருவராகவும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மூத்த நிர்வாகிகளில் ஒருவராகவும் செயல்பட்டார். சிறுநீரகக் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட அவர், அதற்காக உறுப்பு மாற்று சிகிச்சை செய்து கொண்ட போதிலும் தொடர்ந்து உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உடல் நலம் தேறி வருவார் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில் அவர் காலமானார் என்ற செய்தியை தாங்கிக் கொள்ள முடியவில்லை. அருண்ஜெட்லியின் மறைவு பாஜகவுக்கு பெரும் இழப்பாகும்.
விஜயகாந்த், தலைவர், தேமுதிக
நிதித்துறை, பாதுகாப்புத்துறை, தொழில்நுட்பத்துறை, நீதித்துறை போன்ற பல்வேறு துறைகளிலும், மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக சிறப்பான முறையில் செயல்பட்டார். மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்தார். மேலும் நிதித்துறை அமைச்சராக பணியாற்றிய போது நாட்டின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு முக்கிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார். அனைத்துக் கட்சியினராலும் பாராட்டப்பட்ட முக்கியமான பாஜக தலைவர்களில் ஒருவராகவும் அருண்ஜெட்லி திகழ்ந்துள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும், பாஜக கட்சியினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.
ஜி.கே.வாசன், தலைவர், தமாகா
இளம் வயது முதலே பொது வாழ்வில் ஈடுபட்டு வந்த அருண்ஜெட்லி, அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டு திறம்பட வாழ்ந்து காட்டியவர். வழக்கறிஞர் தொழிலில் தனக்கே உரிய பாணியில் திறம்பட வாதிட்டு பல்வேறு முக்கிய வழக்குகளுக்கு நல்ல தீர்ப்பு பெற்றுத்தந்தவர். மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராக தான் சார்ந்த தொகுதி மக்களின் உயர்வுக்காகப் பாடுபட்டதோடு நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் குரல் கொடுத்தவர். தான் சார்ந்த கட்சிக்கு தனது உழைப்பை கடினமாக மேற்கொண்டவர். கட்சிக்கு மட்டுமல்ல மக்கள் பணியிலும், வழக்குக்காக தன்னை நாடி வந்தவர்களுக்கும் நம்பிக்கையோடு செயல்பட்டவர். மிக முக்கியமாக பல்வேறு அரசியல் கட்சியைச் சார்ந்தவர்களிடம் அன்போடு பழகியவர். அனைத்து அரசியல் கட்சியினரும் இவரை அணுகுவது எளிதானது. நல்ல மனிதர், பண்பாளர், பொதுநலன் பேணியவர். இப்படி பன்முகத்தன்மை கொண்ட அருண் ஜெட்லி அவர்கள் காலமானது அவரது குடும்பத்தினருக்கும், பா.ஜ.க விற்கும், நாட்டிற்கும் பேரிழப்பு.
டிடிவி தினகரன், பொதுச்செயலாளர், அமமுக
முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து வருத்தமுற்றேன். பல்வேறு காலகட்டங்களில் மத்திய அரசின் நிதி, சட்டம் உள்ளிட்ட துறைகளில் அமைச்சராக பதவி வகித்த அவர், சிறந்த சட்ட நிபுணராகவும் திகழ்ந்தவர். அருண் ஜெட்லியின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்