Published : 24 Aug 2019 01:08 PM
Last Updated : 24 Aug 2019 01:08 PM

ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு சென்றீர்கள்?- ஜேட்லி மறைவுக்கு அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இரங்கல்

முன்னாள் நிதியமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லியின் மறைவுக்கு அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் இரங்கல் தெரிவித்துள்ளார். ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு சென்றீர்கள்? என்று ஆதங்கத்தோடு பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "முன்னாள் மத்திய நிதியமைச்சர் எனது அன்பு சகோதரர் அருண் ஜேட்லி அவர்கள் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தையும் மனவேதனையையும் தருகிறது. அவரது மறைவு எனக்கு தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. அவரை இழந்ததன் மூலம் நான் என்னையே இழந்ததாக உணர்கிறேன்.

என் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பும் பாசமும் கொண்டவர். கடந்த 28 ஆண்டுகளாக அவரோடு நெருங்கிப் பழகியவன். 2002-ல் நான் மாநிலங்களவை உறுப்பினரான பிறகு அவையில் ஒவ்வொரு நிகழ்விலும் எனக்கு அறிவுரையும் ஆலோசனையும் கூறி எனக்கு வழிகாட்டியவர்.

2007 - 2014 காலங்களில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது டெல்லி பெங்காலி மார்க்கெட்டில் ஜேட்லியின் இல்லத்தில் நண்பர்கள் வாரத்திற்கு குறைந்தது ஒரு முறையாவது கூடுவோம்.

ஜெயலலிதா மீது தனிப்பட்ட முறையில் பாசம் கொண்டவர். அம்மா அவர்களும் அருண் ஜெட்லி மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.

கர்நாடக நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, பெயிலில் வந்த அம்மா தனக்கென ஒரு வேலி அமைத்துக்கொண்டு யாரையும் சந்திக்கவில்லை. அப்போதுகூட 2015 ஜனவரி 18 ம் தேதி அம்மாவை சந்தித்த ஒரே அரசியல் தலைவர் அருண் ஜேட்லி தான்.

40 நிமிடங்கள் நீடித்த அந்த சந்தர்ப்பத்தில் கூட அம்மா அவர்களிடம் என்னைப் பற்றி முழுதாக 5 நிமிடங்கள் பேசியதை என்னால் என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது. மிகச் சிறந்த பாராளுமன்றவாதி. தலைசிறந்த பேச்சாளர். மறக்க முடியாத மனிதர்.

பாஜகவின் வளர்ச்சிக்காக அத்வானியால் வளர்க்கப்பட்ட இரண்டாம் நிலை தலைவர்கள் ஒவ்வொருவராக மறைந்து வருகின்றனர். முதலில் பிரமோத் மகாஜன், பிறகு அனந்தகுமார், சுஷ்மா சுவராஜ், இப்போது அருண் ஜேட்லி.

அருண் ஜேட்லி மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன்திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பு சகோதரரே, அருண் ஜேட்லி அவர்களே! ஏன் இவ்வளவு சீக்கிரம் என்னை விட்டு சென்றீர்கள்?" என நீண்ட பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x