Published : 24 Aug 2019 10:34 AM
Last Updated : 24 Aug 2019 10:34 AM

மதுரை அருகே பிளாட்டுகளாக மாறிய பாசன கால்வாய்; சிஐஎஸ்எப் வீரர்கள் தூர்வாரும் பணியின்போது தெரியவந்தது

 கி.மகாராஜன்

மதுரை

மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நீர் நிலை மீட்புப் பணியின் போது, உயர் நீதிமன்றம் அருகே கால்வாயின் பெரும் பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு பிளாட்டாகவும், கண்மாய் குட்டை யாகவும் மாறியிருப்பது தெரியவந்தது.

நாடு முழுவதும் செயல்படுத் தப்பட்டு வரும் நீர் நிலைகள், நீர் ஆதாரங்களைப் பாதுகாக்கும் மத்திய அரசின் ஜல சக்தி அபியான் திட்டத்தில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் மதுரை விமான நிலையத்தில் பணிபுரிந்து வரும் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் முதல் கட்டமாக மதுரை கிழக்கு தாலுகாவில் உள்ள நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு சனிக்கிழமை, மற்றும் விடுமுறை நாட்களில் இப்பணியை மேற்கொள்கின்றனர்.

உயர் நீதிமன்றக் கிளை எதிரே அமைந்துள்ள சூரன்குளம் கண்மாயின் நீர்வரத்துக் கால் வாய், மறுகால் பகுதியில் ஆக்கிர மிப்புகளை அகற்றும்போது கண்மாய் இடம் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு, அதற்குப் பட்டா வழங்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

உயர் நீதிமன்றக் கிளைக்கு பின்னால் உலகநேரி கண்மாயில் இருந்து காளிகாப்பான் கண் மாய்க்கு தண்ணீர் செல்லும் 12 அடி அகல கால்வாயைச் சுத்தம் செய்யும் பணியில் சென்ற வாரம் மத்திய தொழிலகப் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். இந்தக் கால்வாய் உயர் நீதிமன்றக் கிளையின் பின் பகுதியில் தொடங்கி நான்கு வழிச்சாலை குறுக்காக சென்று காளிகாப்பான் கண்மாய்க்குச் செல்கிறது.

உயர் நீதிமன்றக் கிளையில் இருந்து 12 அடி அகலத்தில் செல்லும் கால்வாய் குறிப்பிட்ட தூரம் சென்றதும் சுமார் 70 மீட்டர் நீளத்துக்கு ஒரு அடி அகல ஓடையாகச் சுருங்கி, பின்னர் 12 அடி அகல கால்வாயாகச் செல்கிறது. ஒரு அடி அகல ஓடை செல்லும் பகுதியில் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு பிளாட்டாக மாற்றப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கால்வாய் ஆக்கிரமிப்பு உயர் அதிகாரி களின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. உலகநேரி யில் இருந்து அரும்பனூர் செல் லும் வழியில் ஆக்கிரமிப்பால் கண்மாய் குட்டையாகச் சுருங்கி யிருந்ததையும் தொழிலகப் பாதுகாப்பு படையினர் கண்டுபிடித் தனர்.

உயர் நீதிமன்றக் கிளை சிஐஎஸ்எப் கமாண்டர் புவனேஷ் குமார், இந்தியாவின் நீர் மனிதன் என்று அழைக்கப்படும் ராஜேந்திர சிங் உருவாக்கிய தருண் பகத் சங்கப் பிரதிநிதி காமாட்சி சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலையில் பெரியாறு பாசனக் கால்வாயில் இருந்து உலகநேரி கண்மாய்க்கு தண்ணீர் செல்லும் கிளை கால்வாயைச் சுத்தம் செய்யும் பணியில் தொழிலகப் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்.

நீர் நிலைகளை மீட்டெடுக்கும் பணியைத் தொடரும் தொழிலகப் பாதுகாப்புப் படையினர் நீர் நிலைகளில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றுவதற்காக பொக்லைன் உள்ளிட்ட இயந்திரங்கள், உப கரணங்கள் இல்லாமல் சிரமப் படுகின்றனர். இருப்பினும் சோர்வடையாது நீர் நிலைகளை மீட்டெடுக்கும் பணியில் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டு வரு கின்றனர்.உலகநேரியில் இருந்து அரும்பனூர் செல்லும் வழியில் ஆக்கிரமிப்பால் கண்மாய் குட்டையாகச் சுருங்கியிருந்ததையும் தொழிலகப் பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x