Published : 24 Aug 2019 10:32 AM
Last Updated : 24 Aug 2019 10:32 AM

தண்ணீரில்லா குளங்களால் தடுமாறும் விவசாயம் : இலக்கு-1,68,050 ஹெக்டேர்; இயன்றது 9,310 ஹெக்டேர் 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பெய்து அணைகளுக்கு ஓரளவு தண்ணீர் வரத்து இருக்கும் நிலையில், திருநெல்வேலி மாவட்ட குளங்கள் நீரின்றி வறண்டு கிடக்கின்றன. மைதானமாக காட்சியளிக்கிறது மூலக்கரைப்பட்டி பேருந்து நிலையம் எதிரே உள்ள கூனிகுளம்.படம் மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் 2,496 குளங்கள் வறண்டு கிடப்பதால் விவசாயம் கேள்விக் குறியாகியுள்ளது. மொத்தம் 1,68,050 ஹெக்டேரில் பயிர்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், இதுவரை 9,310 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி நடைபெற்றுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் ஓராண்டுக்கான இயல்பான மழையளவு 814.80 மி.மீ. ஆகும். ஆகஸ்ட் மாத இயல்பான மழையளவு 23.30 மி.மீ. தற்போது வரை 81.08 மி.மீ. மழை கிடைக்கப்பெற்றுள்ளது. நடப்பு மாதம் வரை மாவட்டத்தில் இயல்பான மழையளவு 298.8 மி.மீ. ஆனால் இந்நாள் வரை 232.59 மி.மீ. மழையே பெய்திருக்கிறது. போதிய மழை இல்லாததால் 2,496 குளங்கள் வறண்டிருப்பதாக வேளாண் துறை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மாவட்டத்தில் 1,221 கால்வரத்து குளங்கள், 1,297 மானாவாரி குளங்கள் என, மொத்தம் 2,518 குளங்கள் உள்ளன. அதில் 22 குளங்களில் மட்டுமே ஒரு மாதத்துக்கான தண்ணீர் இருப்பு உள்ளது. மீதமுள்ள 1,199 கால்வரத்து குளங்கள், 1,297 மானாவாரி குளங்கள் என, மொத்தம் 2,496 குளங்கள் வறண்டுள்ளன. மாவட்டத்திலுள்ள கிணறுகளில் அரைமணி நேரம் முதல் 1 மணி நேரத்துக்கு பாசனம் மேற்கொள்ளும் அளவுக்கு நீர் இருப்பு உள்ளது.

29 சதவீதம் குறைவு

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத் தாறு, கடனா, ராமநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார், வடக்கு பச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு ஆகிய 11 அணைகளிலும் தற்போது 43 சதவீதம் தண்ணீர் இருப்பதாக வேளாண்மைத்துறை தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 72 சதவீதம் நீர் இருந்தது. இந்த 11 அணைகளில் மொத்த கொள்ளளவு 13,771 மில்லியன் கனஅடி. கடந்த ஆண்டு இதே காலத்தில் 9,937 மில்லியன் கனஅடி தண்ணீர் இருந்தது. தற்போது 5,876 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அணைகளில் தற்போது 29 சதவீதம் குறைவாக நீர் இருப்பு உள்ளது.

சாகுபடி பாதிப்பு

மாவட்டத்தில் நடப்பு கார் பருவத்தில் 10 ஆயிரம் ஹெக்டேரில் நெல் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதில் தற்போதுவரை 2,315 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 16,741 ஹெக்டேரில் நெல் சாகுபடி நடைபெற்றது. 2019-2020-ல் 15,700 ஹெக்டேரில் சிறுதானியங்கள் சாகுபடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதில் இதுவரை 3,107 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 41 ஆயிரம் ஹெக்டேரில் பயறு வகை பயிர்கள் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. அதில் 800 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

4,000 ஹெக்டேரில் கரும்பு சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 1,367 ஹெக்டேர் சாகுபடி நடைபெற்றுள்ளது. 5,500 ஹெக்டேரில் பருத்தி சாகுபடி இலக்கில் 1,054 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. 3,350 ஹெக்டேரில் எண்ணெய் வித்து பயிர்கள் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், இதுவரை 667 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 2019-2020-ம் ஆண்டில் 1,68,050 ஹெக்டேரில் அனைத்து வகை பயிர்களும் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. இதில் இதுவரை 9,310 ஹெக்டேரில் மட்டுமே சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் 24,616 ஹெக்டேரில் பல பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x