Published : 24 Aug 2019 10:29 AM
Last Updated : 24 Aug 2019 10:29 AM

விதைப்பந்துகளுடன் விநாயகர் சிலைகள்: நீலகிரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

ஆர்.டி.சிவசங்கர்

உதகை

நீலகிரியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் இயற்கை பொருட்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகளுக்குள் விதைப் பந்துகளை வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் ஒரு பக்கம் காடழிப்பு, மக்கள்தொகை பெருக்கம், அதிகரிக்கும் கட்டிடங்கள், பணப்பயிர்கள் என பாதிப்புகள் ஒரு பக்கம் இருந்தாலும் மறுபக்கம் பிளாஸ்டிக் தடை, மரம் வளர்ப்பு, நீர் நிலைகள் பாதுகாப்பு, புல்வெளிகள் மீட்பு எனத் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பசுமை நீலகிரி திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்திக்கு வைக்கப் படும் விநாயகர் சிலைகளை விதைப் பந்துகளுடன் நீர் நிலைகளில் கரைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறியதாவது:

நீர் நிலைகளில் கரைக்கப்படும் விநாயகர் சிலைகள், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற வேதிப்பொருட்களால் செய்யப்பட்டிருந்தாலோ அல்லது வேதிப்பொருட்களை அடிப்படை யாகக் கொண்ட வர்ணம் பூசப்பட்டி ருந்தாலோ இவற்றில் காணப்படும் வேதிப்பொருட்கள் நீரில் கரைந்து நீர் நிலைகள் மாசடைய வாய்ப்புள்ளது.

களிமண்ணால் செய்யப் பட்டதும், சுடப்படாததும் மற்றும் எவ்வித வேதிப்பொருள் கலவையற்றதுமான கிழங்கு மாவு மற்றும் மரவள்ளி கிழங்கிலிருந்து தயாரிக்கும் ஜவ்வரிசி தொழிற்சாலைக் கழிவுகள் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்காத ஆர்கானிக் மூலப்பொருட்களால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே வழிபாட்டுக்குப் பயன்படுத்த வேண்டும்.

குன்னூர் லாஸ் நீர்வீழ்ச்சி, உதகை காமராஜர் சாகர் அணை, கூடலூர் இரும்புப் பாலம் ஆறு, பந்தலூர் பொன்னானி ஆறு, கோத்தகிரி உயிலட்டி நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களில் மட்டுமே கரைக்க வேண்டும். சிலைகள் கரைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நீர் நிலைகளில் காணப்படும் நீரின் தரமானது கரைப்பதற்கு முன்னரும், கரைத்த பின்னரும் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியத்தால் கண்காணிக்கப் படும். நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை `பசுமை நீலகிரி’ முயற்சியின் அங்கமாக செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள் ளது.

இதன்படி பொதுமக்கள் இயற்கை பொருட்களால் மட்டுமே தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைக ளுக்குள் விதைப் பந்துகளை அமைக்க வேண்டும். இதனால் வழிபாட்டுக்குப் பின்னர் சிலைகளை தண்ணீரில் கரைக்கும்போது விதைகள் பரவி முளைத்து மாவட்டத்தின் பசுமை வளையம் அதிகரிக்க ஏதுவாக அமையும்’ என்றார்.

அனைத்து இடங்களிலும் இதைப் பின்பற்றினால் நல்லது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x