Published : 24 Aug 2019 10:25 AM
Last Updated : 24 Aug 2019 10:25 AM

திருச்சி விமான நிலையத்துக்கு ‘ரெட் அலெர்ட்’: பாதுகாப்பு அதிகரிப்பு- நாகப்பட்டினம், புதுக்கோட்டையில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் தீவிர கண்காணிப்பு

திருச்சி

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக வந்த தகவலைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்துக்கு ‘ரெட் அலெர்ட்' அறிவிக்கப்பட்டு, பாது காப்பு இருமடங்காக அதிகரிக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறை தகவல் வந்ததைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்துக்கு 'ரெட் அலெர்ட்' அறிவிக்கப்பட்டு, மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினரின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் மற்றும் அவர்களின் உடமைகள் என அனைத்தும் முழுவதுமாக சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

இதேபோன்று திருச்சி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் ரயில்களில் வந்த பயணிகள் மற்றும் நடைமேடைகளில் சோதனை மேற்கொண்டனர். ரயில் நிலையத்துக்குள் வரும் அனைத்து பயணிகளும் மெட்டல் டிடெக்டர் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

மாநகரில் உள்ள அனைத்து கண்காணிப்புக் கேமராக்களையும் கண்காணிக்கும் மத்திய காவல் கட்டுப்பாட்டு அறையில் அனைத்து கேமரா பதிவுகளையும் கண் காணிக்குமாறு போலீஸார் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முக்கிய சோதனைச் சாவடிகளில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

நாகை மாவட்டத்தில்...

நாகை கடலோர பாதுகாப்பு போலீஸார் நாகை துறைமுகத்தில் இருந்து அதிவிரைவு ரோந்து படகில் நாகை, வேளாங்கண்ணி, நாகூர் வரை சென்று பைனாகுலர் உதவியுடன் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் படகில் செல்லும் மீனவர்களிடம் அந்நியர்கள் யாராவது படகில் செல்வதை பார்த்தீர்களா என்று விசாரித்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேகரன் உத்தரவின்பேரில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகவேலு தலைமையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் பேராலய முகப்பில் வஜ்ரா மற்றும் ஈகிள் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. நாகூர் தர்கா, சிக்கல் சிங்கார வேலவர் கோயில் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில்...

திருவாரூர் மாவட்ட கடலோரப் பகுதியான முத்துப்பேட்டை, திருத் துறைப்பூண்டி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 10 பேரை, சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

இதனிடையே மாவட்டம் முழுவதும் 25 இடங் களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாகக் கடலோரப் பகுதிகளான திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை பகுதிகள் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

காரைக்கால் மாவட்டத்தில்...

காரைக்கால் மாவட்டத்தில் பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று இரவு 7 மணியளவில் போலீஸார் தீவிர சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் கட்டுமாவடி முதல் அரசங்கரை வரை சுமார் 40 கிலோ மீட்டர் தூரமுள்ள மாவட்ட கடலோரப் பகுதியில் கிழக்கு கடற்கரை சாலையில் கடலோரக் காவல் குழும ஆய்வாளர் அன்னலட்சுமி தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ஜவஹர், ரகுபதி, ராஜ்குமார் ஆகியோர் மூன்று குழுக்களாக பிரிந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும், படகுகள் மூலம் மீன்பிடி தொழிலில் ஈடுபட்ட மீனவர்களிடம் கடலோரக் காவல் குழும போலீஸார் விசாரணை நடத்தினர்.

கரூர் மாவட்டத்தில்...

கரூர் மாவட்டத்தில் கரூர்- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் காவல் கண் காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜன் தலைமையில் நேற்று வாகன சோதனை மேற்கொள் ளப்பட்டது.

மாவட்ட எல்லைகள் மற்றும் மாவட்டம் முழுவதும் காவல் துணை கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள் தலைமை யில் வாகன சோதனை நடத்தப் பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில்...

பெரம்பலூர் மாவட்ட எஸ்.பி நிஷா பார்த்திபன் உத்தரவின்பேரில், பெரம்பலூர்- அரியலூர் சாலை, அகரம் சீகூர், திருமாந்துறை சுங்கச்சாவடி, செஞ்சேரி புறவழிச்சாலை, கோனேரிபாளையம் புறவழிச்சாலை, வேப்பந்தட்டை போலீஸார் தீவிர வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x