

எஸ்.கோபாலகிருஷ்ணன்
திருவாரூர்
வெண்ணாற்றில் மணல் திட்டு அகற்றும் பணி நடைபெற்று வருவ தால், திருவாரூர், நாகை மாவட்டங் களின் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், நீண்டகால நெல் ரகங்களைப் பயிரிடுவதற்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் உள்ள ஆறுகளை உள்ளடக்கிய வெண்ணாறு வடிநிலக் கோட்டத்துக்குட்பட்ட ஆறுகளுக்கு கல்லணையிலிருந்து பிரிந்து வருகின்ற வெண்ணாற்று தண்ணீர்தான் பாசனத்துக்கு பயன்பட்டு வருகிறது. இந்நிலையில், மேட்டூரிலிருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ள நிலையில், வெண்ணாற்றில் வெண்ணலோடை என்ற இடத்தில் மணல் திட்டு அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இந்தப் பணி வரும் 26-ம் தேதி வாக்கில்தான் நிறைவடையும் என பொதுப்பணித் துறை அறிவித்துள்ளது. இதனால், கல்லணையிலிருந்து வரும் வெண்ணாற்று தண்ணீரை, தெற்குப் பெரம்பூரில் வடவாற்றிலும், வெட்டாற்றிலும் பிரித்து வழங்கு கின்றனர். இதன் காரணமாக, நீடாமங்கலம் மூணாற்றுத் தலைப்பு வழியாக தண்ணீர் பாய வேண்டிய பகுதிகளான திருவாரூர் மாவட்ட ஆறுகளுக்கும், நாகை மாவட்டத்தின் தெற்குப் பகுதி ஆறுகளுக்கும் தண்ணீர் வரவில்லை.
எனவே, திருவாரூர், நாகை மாவட்டங்களில் நீண்டகால நெல் ரகங்களைப் பயிரிடும் பருவம் தவறி வருவதாகவும், தாழ்வான பகுதிகளில் நீண்டகால நெல் ரகங்களைப் பயிரிட வேண்டியுள்ளதால், காலந்தாழ்த்தி தண்ணீர் வருவது பயனளிக்காது எனவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயி கூடூர் மூர்த்தி கூறியதாவது:
தாழ்வான பகுதிகளில் 150 முதல் 160 நாட்கள் வயதுடைய நீண்டகால ரகங்களை பயிரிட்டால்தான் எதிர்காலத்தில் வரவுள்ள வடகிழக்கு பருவ மழையைத் தாங்கி நெற்பயிர்கள் வளரும். இதனால், திருவாரூர், நாகை மாவட்ட கடைமடைப் பகுதி விவசாயிகள் பலரும் நீண்ட கால ரகங்களையே பயிரிட்டு வருகிறோம். வேளாண் விரிவாக்க மையங்களிலும் நீண்டகால ரகங்களுக்கு முக்கியத் துவம் கொடுத்து விற்பனை செய்கின் றனர்.
இந்நிலையில், மேட்டூர் அணையில் உரிய காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால், பல விவசாயிகளும் நீண்டகால நெல் ரகங்களை வாங்கி வைத்துக்கொண்டு, தண்ணீருக்காகக் காத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், கடைமடை ஆறுகளுக்கு தண்ணீர் வந்தபாடில்லை. தற்போது, நீண்டகால ரகத்தைப் பயிரிட பருவமும் தவறிவருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் நாற்றங்கால் அமைத்து, தண்ணீர் விட்டு பணியைத் தொடங்கினால்தான், தை மாதத்தில் உரிய நேரத்தில் அறுவடை செய்ய முடியும்.
ஆறுகளில் தண்ணீர் வருவதை இன்னும் காலதாமதப்படுத்தினால், அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழையின்போது உரிய வளர்ச்சியின்றி நெற்பயிர்கள் சேதமடையும். மாறாக, தாழ்வான பகுதிகளில் 135 நாட்கள் வயதுடைய மத்தியகால ரகங்கள் அல்லது 90 நாட்கள் வயதுடைய குறுகிய கால பயிர்களைப் பயிரிட்டால், அவை மழை வெள்ளத்தில் மூழ்கும் வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக, திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் கடைமடைப் பகுதிகளாக உள்ள 3 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்களில் நேரடி தெளிப்பும் செய்ய முடியாமல், நாற்றங்கால் அமைக்க ஆறுகளில் தண்ணீரும் இல்லாமல், நீண்டகால ரகங்களைப் பயிரிடும் பருவம் தவறிவருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
எனவே, வெண்ணலோடையில் நடைபெற்று வரும் மணல் திட்டு அகற்றும் பணியை விரைவாக செய்து முடிக்க வேண்டும். மேலும், தாழ்வான பகுதிகளில் நீண்டகால ரக பயிர்களை சாகுபடி செய்யும் வகையில், கடைமடை பகுதிகளுக்கு விரைந்து தண்ணீர் வருவதற்காக கூடுதல் தண்ணீரை திறக்க வேண்டும் என்றார்.