Published : 24 Aug 2019 10:20 AM
Last Updated : 24 Aug 2019 10:20 AM

வரலாற்று காலத்துக்கு முற்பட்ட  குறியீடுகள் கண்டுபிடிப்பு!

கோவை பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கல்வெட்டியல் பட்டயப் படிப்புப் பிரிவு மற்றும் தமிழ்த் துறை இணைந்து 29-ம் ஆண்டு தொல்லியல் கருத்தரங்கத்தை நடத்தின. இதில், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 350-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். 30-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு, புதிய கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டன.
தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், ஓலை ஆவணம், காத்த ஆவணம், பண்டைய மட்பாண்ட ஆவணம் தொடர்பான அரிய கண்டுபிடிப்புகள் இக்கருத்தரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டன. கல்லூரிச் செயலர் தி.கண்ணையன் தலைமை வகித்தார். கல்வெட்டியல் துறை முன்னாள் தலைவர் எ.சுப்பராயலு கருத்தரங்க நோக்கம் குறித்து பேசினார்.

கடந்த ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள் தொடர்பான செய்திகள் அடங்கிய ஆவண இதழ் வெளியிடப்
பட்டது. கௌமார மடாலயம் ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் சோ.பத்மாவதி, கல்வெட்டியல் பட்டயப் படிப்பு பொறுப்பாசிரியர் ச.ரவி உள்ளிட்டோர் பேசினர். கருத்தரங்கில் பங்கேற்றோருக்கு கல்லூரி முதல்வர் து.பிருந்தா சான்றிதழ் வழங்கிப் பாராட்டினார். அறிஞர்பூங்குன்றனின் தொல்லியல் பணியைப் பாராட்டிக் கெளரவிக்கப்பட்டது. நாணய ஆய்வாளர் சீதாராமன் `தமிழக காசுகளில் எழுத்துகள்’ என்ற தலைப்பிலும், பொறியாளர்திரு.கோமகன் `கோயில் தோற்றம், வளர்ச்சியில் கண்காணிப்பு அதிகார அரசியல்’ என்ற தலைப்பிலும் பேசினர். இதில், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதுடன், பேரூர் பட்டீஸ்வரர் கோயில் கல்வெட்டுகள், சிற்பக் கலைகளைப் பார்வையிட களப் பயணமும்மேற்கொள்ளப்பட்டது. தொல்லியல் செயலர் சு.ராசவேலு கருத்தரங்கை ஒருங்கிணைத்தார். தொல்லியல் வரலாறு சார்ந்த 3 நூல்களும் வெளியிடப்பட்டன.

இதுகுறித்து தமிழ்த் துறை இணைப் பேராசிரியரும், கல்வெட்டியல் பட்டயப் படிப்பு பொறுப்பாசிரியருமான ச.ரவி கூறும்போது, “இந்த தொல்லியல் கழக கருத்தரங்கில், பல்வேறு தொல்லியல் கண்டுபிடிப்புகள் வெளியிடப்பட்டன. சீன அருங்காட்சியகத்தில் உள்ள தமிழ்க் கல்வெட்டை, பேராசிரியர் சுப்பராயலு அறிமுகப்படுத்தினார்.

காலிமங்களத்தில் கிடைக்கப்பெற்ற இரட்டைக் குறியீடுகள் (கிராஃபிட்டி மார்க்ஸ்)அனைவரையும் கவர்ந்தது. சுடுமண் மட்கலத்தில் இரட்டைக் குறியீடுகள் கிடைத்திருக்கின்றன. ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்களின் குழு அடையாளம் இவை. கோவைக்கு மேற்கே, ஆலாந்துறைக்குத் தெற்கே, மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ளது காலிமங்களம் கிராமம். அங்கு பெருங்கற்காலப் பண்பாட்டுப் பொருட்கள் அதிக அளவில் மேற்பரப்பாய்வில் கண்டறியப்ட்டன.

2017-2018-ல் பி.எஸ்.ஜி. கல்லூரியில் படித்த கல்வெட்டியல் மாணவர்களின் மேற்பரப்பாய்வில் கிடைத்த பொருட்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது இவ்வினக்குழுக் குறியீடு. சுடுமணல் ஓட்டில் இரண்டு குறியீடுகள் இருந்ததைக் கண்டறிந்தோம்.ஒன்று செடி போன்றது. மற்றொன்று பம்பரம் சுழல்வது போன்றது. இரண்டு குறியீடுகளும் ஒரே சுடுமண் ஓட்டில் கிடைத்திருப்பது சிறப்புக்குரியது. கொங்கு மண்டலத்துக்கே உரிய வர்ணப்பூச்சு பூசப்பெற்ற, சிவப்புநிற வளைகோடுகளுக்கு மத்தியில் இக்குறியீடுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை இரண்டு இனக் குழுக்களின் அடையாளங்களாகக் கருதப்படுகின்றன. ஒன்றையடுத்து ஒன்று காணப்படுவதால், நட்புறவு கொண்ட இரு இனங்களை அறிந்து கொள்வதாக இவை இருக்கின்றன.
இவற்றின் காலம் 2,500 ஆண்டுகள். பெருங்கற்காலப் பண்பாட்டில் மக்கள் இனக் குழுக்களாக வாழ்ந்த காலத்தில், குழுக்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள பறவைகள், தாவரங்கள் போன்றவற்றின் பெயர்களை வைத்துக்கொள்வர். அக்காலத்தில் ஜாதிகள் கிடையாது.

இயற்கை குகையில் வாழ்ந்த இனக் குழு மக்கள், நாகரிக வாழ்க்கையை நோக்கி வரலாற்றுக் காலத்தில் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு வாழ்ந்தனர். அப்போதுஅவர்கள் சுடுமண்கலையைக் கண்டறிந்து, மண்பாண்டங்களைப் பயன்படுத்தத் தொடங்கினர். எழுத்து தோன்றுவதற்கு முன்பு, தங்கள் குழுக்களின் அடையாளங்களாக சில குறியீடுகளை அவற்றில் அமைத்துக்கொண்டனர். இனக் குழு மனிதர்களின் குழுக் குறியீடுகள் கிடைத்திருப்பதால், இப்பகுதியில் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே, ஒரே ரத்த உறவு கொண்ட மனிதர்கள் வாழ்ந்ததற்கு உரிய முக்கியத் தரவாக இக்குழு குறியீடு கிடைத்திருப்பது சிறப்புக்குரியது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x