Published : 24 Aug 2019 10:18 AM
Last Updated : 24 Aug 2019 10:18 AM

அரசின் கடைக்கண் பார்வைக்கு காத்திருக்கும் தொழில்முனைவோர்!

ஆர்.கிருஷ்ணகுமார்

பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வரும் சிறு, குறுந் தொழில்முனைவோர், மத்திய அரசின் கருணைப் பார்வையுடன் செயல்பட்டு, தங்களை நெருக்கடிகளில் இருந்து மீட்க வேண்டுமென எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்த நிலையில், கோவையில் நடைபெற்ற கூட்டத்தில், பாஜக மாநில பொதுச் செயலர் வானதி சீனிவாசனிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
‘உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்’ என்று அன்றே பாடினார் பாரதியார். ஆனால், தற்போது இவ்விரு துறையினருமே நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கின்றனர். குறிப்பாக, சிறு, குறுந் தொழில் துறையினர் பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளனர்.
இந்தியாவில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமலாக்கப்பட்ட பின்னர், சிறு, குறுந்தொழில்கள் தடுமாறியுள்ளன. அண்மையில், நாடு தழுவிய அளவில் ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, லட்சக்கணக்கானோரின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. வாகனங்களுக்கான உதிரி பாகங்களைத் தயாரிக்கும் கோவை சிறு, குறுந் தொழில் நிறுவனங்கள் ஸ்தம்பித்துப் போயிருக்கின்றன. ஏராளமான நிறுவனங்கள் மூடப்படும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளன.

பெருமளவு உற்பத்தி நிறுத்தப் பட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை முற்றிலுமாக இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்த நிலையில், நெருக்கடியைத் தீர்க்க மத்திய அரசு முன்வர வேண்டுமென சிறு, குறுந் தொழில்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். பாஜக மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன், கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்க (கொடிசியா) அலுவலகத்தில் நேற்று தொழில் துறையினரை சந்தித்துப் பேசினார்.

கொடிசியா தலைவர் ஆர்.ராமமூர்த்தி, இந்திய தொழிற்கூட்டமைப்பு (சிஐஐ) தலைவர் ஆர்.வரதராஜன், தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத் துணைத் தலைவர் கே.வி.கார்த்திக், கோவை தொழில்துறை கட்டமைப்பு சங்கத் தலைவர் ஜெயகுமார் ராமதாஸ், சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் நலச் சங்கத் தலைவர் எஸ்.சுருளிவேல், தென்னிந்திய நூற்பாலையாளர்கள் சங்கத் தலைவர் என்.முருகேசன், இந்திய ஃபவுண்டரிமேன் சங்கத் துணைத் தலைவர் எஸ்.பால்ராஜ், மோட்டார் பம்ப்செட் மற்றும் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் கே.மணிராஜ், கோவை, திருப்பூர் சிறு மற்றும் குறுந்தொழில்முனைவோர் சங்கப் பொதுச் செயலர் சி.சிவக்குமார், கோவை குறு, சிறு ஃபவுண்டரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஏ.சிவசண்முகுமார், லகு உத்யோக் பாரத் சங்க மாநிலச் செயலர் எம்.சிவகுமார், மாவட்டத் தலைவர் எம்.எஸ்.விஜயராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத் தலைவர் ஆர்.ராமமூர்த்தி கூறும்போது, “தொழில் துறை பிரச்சினைகள் தொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினோம். தற்போது, பாஜக மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன், தொழில் துறையினரின் கோரிக்கைகளை கேட்டு, மத்திய, மாநில அமைச்சர்களுக்குத் தெரிவித்து, உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்துள்ளார்” என்றார்.

வங்கிகள் கெடுபிடி...

பல்வேறு தொழில் துறையினரும் தங்களது குமுறல்களை கொட்டித் தீர்த்தனர். தொழில் நெருக்கடி மிகுந்த சூழலில், கடன், வட்டியை வசூலிப்பதில் வங்கிகள் காட்டும் கெடுபிடி, புதிய கடன்களை வழங்குவதில் விதிக்கப்படும் நிபந்தனைகளை பலரும் தெரிவித்தனர். மோட்டார் பம்ப்செட்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்பட வேண்டியதன் அவசியம், வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களின் நிலை, வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களுக்கு தேவையான வரிச் சலுகை, சிறு, குறுந் தொழில் துறைக்கு மத்திய அரசின் சலுகைகள் குறித்தெல்லாம் விளக்கினர்.

பாஜக மாநிலப் பொதுச் செயலர் வானதி சீனிவாசன் கூறும்போது, “சிறு, குறுந் தொழில் துறையினரின் பிரச்சினைகள், கோரிக்கைகளை மத்திய அரசுக்கு எடுத்துச் செல்வதற்காகவே இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவையைப் பொறுத்தவரை, சிறு, குறுந்தொழில்கள் அதிக அளவில் உள்ளன. தொழில் துறையில் சில பிரச்சினைகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். மத்திய அரசின் மூலம் இதற்குத் தீர்வுகாண வேண்டுமென தொழில் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

வங்கிகள், சிறு, குறுந் தொழில் துறையினருக்கு கடன்களை வழங்குவதில் உள்ள பிரச்சினைகளை விளக்கியுள்ளனர். அதிக நிபந்தனைகள், கட்டுப்பாடுகள் விதிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய நிதியமைச்சகத்திடம் வலியுறுத்துவோம். பொதுத் துறை நிறுவனங்கள், தங்களுக்குத் தேவையான உதிரி பாகங்களை குறிப்பிட்ட அளவுக்கு சிறு, குறுந் தொழில்துறையினரிடம் வாங்க வேண்டுமென விதிமுறைகள் உள்ளன. எனினும், பொதுத் துறை நிறுவனங்கள், தங்களுக்கு உதவுவதில்லை என்று சிறு, குறுந்தொழில்முனைவோர் தெரிவித்துள்ளனர். மேலும், இதைக் கண்காணிக்கும் வகையில் ஒரு குழுவை அமைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மின் விநியோகத்தில் நிலவும் பிரச்சினைகள் உள்ளிட்ட, மாநில அரசு தொடர்பான கோரிக்கைகளை தமிழக அமைச்சர்கள் கவனத்துக்கு கொண்டுசெல்வோம். தொழிலாளர் வருங்கால வைப்புநிதியைச் செலுத்துவதில், வடமாநிலத் தொழிலாளர்கள் ஆர்வமில்லாமல் இருக்கின்றனர். இது தொடர்பாக அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.மத்திய அரசின் சிறு தொழில் வளர்ச்சி வங்கி, மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட அமைப்புகள் மற்றும் வங்கிகள், சிறு, குறுந்தொழில்துறையினருக்கு கடன்கள் வழங்குவதில் சுணக்கம் காட்டுவதாகத் தெரிவித்துள்ளனர்.

ஜாப் ஆர்டர்களுக்கான ஜிஎஸ்டி...

முக்கியமாக, ஜாப் ஆர்டர் அடிப்படையில் செயல்படும் சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்
பட்டுள்ளதால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஜிஎஸ்டி கவுன்சில் உறுப்பினரான, அமைச்சர் ஜெயக்குமாருடன் ஆலோசித்து, பின்னர்ஜிஎஸ்டி கவுன்சிலில் முறையிடப்படும். கடந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர், ஜாப் ஆர்டர் அடிப்படையில் செயல்படும் நிறுவனங்களுக்கான வரியைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தனர்.

எனவே, நிச்சயம் இது தொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்தி, வரி விகிதத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்போம்.
கர்நாடக மாநிலத்தில் தொழில் துறைக்கான ஆல்கஹாலுக்கு வரி குறைவு என்பதால், அங்கிருந்து தமிழகத்துக்கு அதிக அளவில் ஆல்கஹால் கொண்டுவருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்தும் உரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவிப்போம்.
மத்திய ரிசர்வ் வங்கி அறிவிக்கும் திட்டங்கள், சலுகைகளை, வங்கிகள் வாடிக்கை யாளர்களுக்கு வழங்குவதில்லை என்றும் புகார்கள் தெரிவிக்கின்றனர். ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், வாகன உதிரி பாகங்களை தயாரிக்கும் சிறு, குறுந்தொழில்முனைவோர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வேலையிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு தொழில்முனைவோர் தெரிவித்துள்ள அனைத்து பிரச்சினைகள், கோரிக்கைகளையும் தொகுத்து, மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகளிடம் வழங்கி, உரிய தீர்வுகாணுமாறு வலியுறுத்துவோம். மேலும், தொழில் துறை பிரதிநிதிகளுடன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்களையும் சந்தித்து முறையிடத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x