Published : 24 Aug 2019 10:15 AM
Last Updated : 24 Aug 2019 10:15 AM

மியாவ்...மியாவ்... கோவையில் முதல்முறையாக பூனை கண்காட்சி

தமிழகத்தில் முதல்முறையாக கோவையில் நாளை (ஆகஸ்ட் 25) பூனைகள் கண்காட்சி மற்றும் பூனை வளர்ப்பு முறை தொடர்பான கருத்தரங்கு நடைபெற உள்ளது.

பூனை வளர்ப்புக்காக பதிவு பெற்ற `கோவை கேட்டரி கிளப்’ இந்தக் கண்காட்சியை நடத்துகிறது. மரபுரீதியான, அனைத்து வகையான பூனைகள் இக்கண்காட்சியில் இடம்பெறுவதுடன், பார்வையாளர்கள் பூனைகளைப் பற்றி அறிந்துகொள்ள வசதியாக, பல்வேறு வகையான தகவல்கள், பூனைகளின் படங்களும் இடம்பெறும். மேலும், கருத்தரங்கும் நடைபெறுகிறது.
கோவை சுங்கம் பைபாஸ் சாலையில் உள்ள, கோவை டெக்ஸ்சிட்டி ரோட்டரி சங்க அரங்கில் நாளை காலை 10 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடக்கிறது.

இதில், இந்தியாவின் ஒரே பூனை நடுவர் சுதாகர் கதிகி கஹானி பேசுகிறார். பூனை குட்டிகளை வளர்ப்பது, பூனைகளைப் பராமரிப்பது, இனப்பெருக்கம் குறித்த பல்வேறு விஷயங்களை அவர் விளக்குகிறார். மேலும், கோவை ஜெ.எஸ்.ஆர். செல்லப் பிராணிகள் சிறப்பு மருத்துவர் வேணுகோபால் மற்றும் குழுவினர், பூனைகளுக்கு இலவசமாக தடுப்பூசி போட்டு, குடல்புழு நீக்கம் செய்கின்றனர்.

இதுகுறித்து கோவை பூனை வளர்ப்பு நலச் சங்கத்தினர் கூறும்போது, “உலகம் முழுவதும் 93 வகையான பூனைகள் உள்ளன. இந்தியாவில் மட்டும் 41 வகையான பூனைகள் இருக்கின்றன. கோவையில் பெர்சியன் லாங், பெர்சியன் சாட், ஹிமாலயன், பெங்கால், சியாமிஸ், சைபீரியன், ரஷ்யன் ப்ளூ மற்றும் இந்திய நாட்டு வகை பூனைகள் உள்ளன. பூனைகளைப் பராமரிப்பது மிகவும் எளிது. குறைவான இட வசதி இருந்தால் போதும்.

தமிழகத்தில் பதிவு பெற்ற ஒரே பூனை நலச் சங்கமான கோவை கேட்டரி கிளப், `அலையன்ஸ் ஆஃப் கேட் பேன்சியர் இந்தியா’ அமைப்பின் அங்கீகாரம் பெற்றுள்ளது. பூனைகளின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், பூனை வளர்ப்போர் மற்றும் பூனை விரும்பிகளுக்காக தொடங்கப்பட்டது இந்த சங்கம்.

இந்த அமைப்பின் தலைவராக அர்த்தனாரி பிரதாப், துணைத் தலைவராக எம்.டி.மூசா சயீத், செயலராக அன்னி டி கரோல், இணைச் செயலராக கே.ரீகன், பொருளாளராக பிரதீபா ஆகியோர் செயல்படுகின்றனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x